இலங்கை மக்களை விளம்பரங்கள் மூலம் ஏமாற்றும் கும்பல் ஒன்று தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மோசடி நடவடிக்கை மூலம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் வெலிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நாத்தன்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இணையத்தள பக்கங்களில் பல்வேறு விளம்பரங்களை பதிவிட்டு அதனை கொள்ளவனவு செய்வதற்கு ஆரம்பக்கட்ட வைப்பு ஒன்றை செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பதிவிடும் நபர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பொது மக்களின் அடையாள அட்டைகள் திருடப்படுவதாகவும் அதனை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால் இவ்வாறான விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் எனவும், அடையாள அட்டைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விளம்பர கும்பலிடம் ஏற்கனவே சிக்கி பணம் செலுத்தியவர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தின் இயக்குனரின் 071 859 17 53 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.