முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரத்தியேகமாகக் கலந்துரையாடுவதற்குப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் 7 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தர்ப்பம் கோரியிருந்தனர் எனவும், அதற்குக் குறித்த நாளில் மாலை 5.30 மணிக்குச் சந்தர்ப்பத்தை வழங்குவதாகப் பிரதமர் கூறியிருந்தார் எனவும் முஷாரப் முதுநபீன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது,

"மாலை 5.30 மணிக்குச் சந்திப்பை நிகழ்த்துவதாக இருந்தால், இப்தார் நேரம் என எம்மால் எடுத்துக்கூறப்பட்டதையடுத்து தான் இப்தாருக்கான ஏற்பாட்டைச் செய்வதாகப் பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

எனவே, பிரதமரின் அழைப்பின் நிமிர்த்தம் அங்கு சென்ற நாம் இப்தார் நிகழ்விலும் கலந்துகொண்டு பிரதமருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

அவற்றின் பலவற்றைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு வழிவகைகள் செய்வதாகப் பிரதமர் உறுதியளித்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது சாதாரண விடயம்.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு சிலர் அரசியல் செய்கின்றமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் மக்களின் பங்களிப்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு கோவிட் தொற்று காரணமாக ஒரு சிலரின் பங்களிப்புடன் நடைபெற்றது எனப் பிரதமர் அலுவலகம் கடந்த வியாழக்கிழமை அறிக்கை மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது