Flash News | The Truth

“இனவாத முதலீடுகளிலான அரசியல் நிலைத்ததாக, உலகில் சரித்திரமில்லை; ஜனாஸாக்களை எரிப்பது எம்மை உயிருடன் கொளுத்துவதற்கு சமனானது” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!


இனவாதிகளை மகிழ்வூட்டுவதற்காகவும் எதிர்கால அரசியல் இருப்பை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காகவும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாட்டை தொடருவீர்களேயானால், அதன் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதோடு, உலக நாடுகளில் இருந்து முற்றாக அந்நியப்பட்டுவிடுவீர்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று  (08) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“நாட்டைப் பீடித்துள்ள கொரோனா வைரஸை விட இனவாதமே தற்போது மோசமாகத் தலையெடுத்துள்ளது. ‘இனவாதத்தையும் மதவாதத்தையும் கையிலெடுத்து மக்களை திருப்திப்படுத்தலாம், நாட்டுக்கு நல்லது செய்யலாம், பொருளாதாரத்தை மேம்படுத்தலாம், சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பலாம்’ என்று நீங்கள் யாராவது கனவு கண்டால் அதைவிட முட்டாள்தனம் இல்லை.

1956ஆம் ஆண்டு இனவாதத்தைக் கருவியாகக் கொண்டு ஆட்சிக் கதிரையைப் பிடித்த எஸ்.டபிள்யயூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு நடந்த கதியை ஞாபகப்படுத்த வேண்டும். ஜேர்மனியின் ஹிட்லரும் இவ்வாறான அட்டூழியங்களினாலேயே அழிவைச் சந்தித்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இப்போது எந்த நிலையில் உள்ளார். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இனவாதத்தினால் நாடும் முன்னேறாது. தலைவர்களும் முன்னேறமாட்டார்கள். ஆனால், இனவாதக் கொள்கையினால் ஆட்சிக் கதிரையை தற்காலிகமாக தக்கவைக்கவே முடியும்.

இந்த நாட்டில் காலாகாலமாக சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் அந்நியோன்ய உறவை வளர்த்து வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏன் இந்த அநியாயங்களைச் செய்கின்றீர்கள்? சுதந்திரத்துக்காக உழைத்ததும் ஐக்கியத்துக்காக பாடுபட்டதுமா அவர்கள் செய்த தவறு? அகதிகளாக வெளியேறிய போதும், சுஜூதுகளிலே சுட்டுக்கொல்லப்பட்ட போதும் நாங்கள் இறைமையை மதித்தவர்கள். உலகிலே 190 நாடுகள் மேற்கொள்ளும் நடைமுறைக்கு மாற்றமாக, நீங்கள் எங்களது மனங்களை உடைக்கின்றீர்கள். நீங்கள் மட்டும் இந்த அடாத்தைச் செய்து முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களை உடைக்கின்றீர்கள். இது 25 இலட்சம் முஸ்லிம்களின் வேதனை மாத்திரமல்ல, உலகில் வாழும் 2.5 பில்லியன் முஸ்லிம்களும் மனமுடைந்து போயிருக்கின்றனர். உலக முஸ்லிம் நாடுகள் இந்த அவலம் குறித்து வேதனையுடன் இருக்கின்றன.

இலங்கையில் மட்டும் ஏன் இவ்வாறு அநியாயம் நடக்கின்றதெனக் கேட்கின்றனர். லண்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, ஜப்பான், கட்டார் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கை வாழ் உறவுகள், இதற்கு எதிராக தக்பீரைச் சொல்லிக்கொண்டு, சிங்கக் கொடியை கையிலேந்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தினமும் கண்ணீருடன் காலத்தைக் கடத்துகின்றனர். ஏன் இவ்வாறு அரசு அடம்பிடிக்கின்றது? அநாகரிகமாக நடக்கின்றது? இவர்களுக்கு இரக்க சிந்தை இல்லையா? என்ற வேதனையும் வெப்புசாரமுமே அவர்களை ஆட்கொண்டிருக்கின்றது. ஜனாஸாக்களை எரிப்பதனூடாக வாக்குகளை நீங்கள் அதிகரிக்கலாம் என எண்ணுவதும், தேர்தல்களில் அதிகூடிய ஆசனங்களை பெறலாம் என நினைப்பதும் கனவாகவே முடியும். எமது பிரார்த்தனைகள் வலிமையானவை. எனவே இந்த பலாத்கார அட்டூழியத்தை தொடராதீர்கள். இதை சர்வசாதாரண விடயமாக எடுக்காதீர்கள். விளையாட்டாக நினைக்காதீர்கள். முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது, எம்மை உயிருடன் எரிப்பதற்குச் சமனானது. தயவு செய்து எம்மை ஆத்திரப்படுத்தாதீர்கள்.

30 வருட யுத்தப் படிப்பினை போதாதா? சஹ்றான் என்ற கயவன் செய்த கொடூரச் செயலை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்த்ததை மறந்துவிட்டீர்களா? அந்தக் கயவர் கூட்டத்தை சாய்ந்தமருதுதுவில் காட்டிக்கொடுத்தோமே! அந்தப் பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்க உதவினோமே! தற்கொலைதாரிகளின் மையித்துக்களை எமது மையவாடியில் அடக்க மறுத்தோமே! இவைகளை எல்லாம் மறந்துவிட்டீர்களா? இவ்வாறு நாங்கள் செய்த நன்மைகளுக்கு நீங்கள் செய்கின்ற பிரதியுபகாரமா இது? எங்கள் சமூகத்தை பழிதீர்க்கின்றீர்கள். அரசியலுக்காகவா இவ்வாறு செய்கின்றீர்கள்?

சுகாதார அமைச்சர் நேற்றைய தினம் (07) பெரும் பொய்யொன்றை இந்த உயரிய சபையில் வாய்க்கூசாமல் சொல்கின்றார். அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.முனசிங்கவின் கையெழுத்தில் அமைக்கப்பட்ட நிபுணர்களின் அறிக்கையை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். மருத்துவத் துறையில் அனைத்துத் துறைசார்ந்த விஷேட நிபுணர்களையும் உள்ளடக்கிய பேராசியர் ஜெனிபர் தலைமையிலான நிபுணர் குழுவின் அண்மைய அறிக்கையில் அடக்க முடியுமென்று தெளிவாகக் கூறப்பட்ட போதும், அந்த அறிக்கையை இனவாதியான சன்ன பெரேரா தலைமையிலான தொழில்நுட்பக் குழுவுக்கு பாரப்படுத்தியுள்ளதாக இப்போது தெரிவிக்கின்றார். இது என்ன நாடகம்?

சன்ன பெரேரா தலைமையிலான தெரிவுக்குழு அரசியல் நோக்குடன் உருவாக்கப்பட்டதனாலேயே, இனவாத நோக்குடன் இந்த எரிப்பு நடைமுறை தொடர்கின்றது என்பதை முழுநாடே அறியும். இந்த நிலையில் மீண்டும் அதே தொழில்நுட்பக் குழு, அறிக்கையின் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொண்டு எப்படி அடக்கும் உரிமையை எமக்குத் தரப்போகின்றது?

எனவே, முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையை ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் தொடர்ந்தும் தட்டிக்கழிக்காது, உலக நாடுகளின் நடைமுறையை பின்பற்றி, அடக்கும் உரிமையை விரைவில் வழங்குங்கள்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :


எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -


Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Previous Post Next Post
Flash News | The Truth
Flash News | The Truth
Flash News | The Truth