எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான  எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களை கடந்த  (ஜன.03) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்களில் ஈடுபட தனக்கு ஆணை வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறி செயற்படுவதற்கு தான் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில், தமது கட்சியின் மரபுக்கு அமைய, செயற்குழுவின் தலைவராக மாத்திரமே தான் தலைமை தாங்க தயார் எனவும் அவர், கட்சியின் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

அத்தோடு, உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்குமானால், 40 வீதமான புதுமுக வேட்பாளர்களை களமிறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.