.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமை தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள, அவரின் இல்லத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

ரியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

அவர்கள் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பில், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தாம் கைதுசெய்யப்படுவதற்கு முன்னதாக இன்று (24) அதிகாலை சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தமது சகோதரர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டதாகவும், தம்மைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது