வில்பத்து வன பாதுகாப்பு பகுதில் காடழிப்பை செய்துள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லவென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே (19) அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்க ராஜ வனப்பகுதியில் காடழிப்பு செய்யப்படுவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவித்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக கூறப்படும் பாக்யா அபேரத்ன என்ற யுவதிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடனேயே இந்த ஊடக சந்திப்பை அவர் நடத்தியிருந்தார்

வில்பத்து பகுதியிலும் காடழிப்பு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்கி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் குற்றச்சாட்டு இருக்கிறதே என ஊடகவியலாளர் ஒருவர்கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஹிருணிகா எம்.பி, ரிஷாத் பதியுத்தீன் எம்பி முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் மட்டுமே. அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கு தொடர்பில்லையென தெரிவித்தார்.தேர்தலுக்காக மட்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தவர் என்றும் தெரிவித்தார்.

‘ரிஷாத் பதியுத்தீன் முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர், இவ்வாறான செயல்கள் காரணமாவே நல்லாட்சி அரசாங்கம் தோல்வியுற்றது. இதனாலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் வாக்குகளும் கிடைத்தன.

ஆனாலும் ரிஷாத்துக்கு வில்பத்து வனப்பகுதிக்குள் காணிகளை வழங்கியவர் பசில் ராஜபக்ஷதான்.

ரிஷாத் வில்பத்து வனப்பகுதியை அழித்தார் என்ற சம்பவத்துக்கு நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. அவர் அந்த உத்தரவுக்கு அடிபணியா விட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதுவும் செய்ய முடியாது.

சுற்றாடலை அழிக்க இடமளிக்க வேண்டாம். நிம்மதியாக சுவாசிக்கும் உரிமையை பெற்றுத் தருமாறு ஜனாதிபதியிடம் கேட்கிறோம் என்றும் ஹிருணிகா தெரிவித்தார்