கொரோனா தொற்றியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தம்மிக்க பாணியை ஒரு முறை மாத்திரமே பருகியதாக அமைச்சரின் கணவரான சப்ரகமுவ மாகாணசபையின் முன்னாள் தவிசாளர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் காணக் கூடியதாக பகிரங்கமாக அவர் அருந்தியதே அந்த ஒரு முறை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது ஆச்சரியமானது. எப்படி பரவியது என்பது தொடர்பில் எமக்கே பிரச்சினை உள்ளது.

எனினும் அவர் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் தொடர்பான சுகாதார அதிகாரிகளுடன் மாத்திரமின்றி பல்வேறு நபர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

அண்மையில் ஒரு நாள் தனது தொண்டையில் வலி இருப்பதாக கூறியதால், PCR மற்றும் என்டிஜன் பரிசோதனை செய்தோம். இந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமைச்சர் தற்போது ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறுகிறார். நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்
.

வீட்டில் பணியாற்றும் பாதுகாவலர்கள் உட்பட அனைவருக்கும் PCR மற்றும் என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சரை தவிர எங்கள் எவருக்கும் கொரோனா தொற்றியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.