பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் உள்ளிட்ட ஐவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ரிட் மனுவை 2019ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் சோபித ராஜகருண, தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவைப் பரிசீலித்த நீதியரசர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை மார்ச் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதம், உயிரியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் சித்தியடைந்த தங்களுக்கு பரீட்சையின் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய முறைமையில் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின்படி பல்கலைக்கழக நுழைவு, வெட்டுப்புள்ளியில் கணிசமான வேறுபாடு இருக்கின்றது எனவும், இதனால் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் சமமான அல்லது நியாயமான பல்கலைக்கழக நுழைவு, வெட்டுப்புள்ளி முறையை அறிவிக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படியே பிரதிவாதிகளை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.