பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறக்கூடிய அபாயகரமான பாதையில் பயணிக்கும் இலங்கை: ஐ.நா அறிக்கை


ஜனவரி 27ஆம் திகதி புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நாவின் புதிய அறிக்கையொன்று கடந்த கால அத்துமீறல்களை இலங்கை கவனத்திலெடுக்கத் தவறியிருக்கும் நிலை, மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறக்கூடிய அபாயத்தைக் கணிசமான அளவில் தீவிரப்படுத்தியிருப்பதாக எச்சரித்துள்ளது.

தண்டனை விலக்குரிமை ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலை, அரச கருமங்கள் அதிகரித்தளவில் இராணுவ மயமாக்கப்பட்டு வரும் நிலை, இனத்துவ - தேசியவாத கடும்போக்கு சொல்லாடல்கள் மற்றும் சிவில் சமூகத்தை அச்சுறுத்துதல் போன்ற கவலையூட்டும் போக்குகள் கடந்த காலத்தில் இடம்பெற்று வந்திருப்பதனை அந்த அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையின் ஆயுத மோதல் முடிவடைந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளின் பின்னர் அனைத்துத் தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கு தண்டனை விலக்குரிமை நிலை முன்னரிலும் பார்க்க இப்பொழுது ஆழமாக வேரூன்றியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் புலன்விசாரணைகள் மற்றும் வழக்குகள் என்பவற்றை முனைப்பான விதத்தில் தடுத்து வருவதுடன், முன்னர் இது தொடர்பாக ஏற்பட்டிருந்த வரையறுக்கப்பட்ட முன்னேற்றங்களையும் பின்தள்ளி வருவதுடன் இணைந்த விதத்தில் இது இடம்பெறுகின்றது என ஐ நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 40/1 இன் பணிப்பானையின் கீழ் வெளியிடப்படும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சர்வதேச சமூகம் தனது கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமெனவும், வலுவான தடுப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளும் அந்த அறிக்கை, "இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களை எடுத்து வந்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் என்பன மீண்டும் தோன்றுவதற்கான ஒரு பின்புலத்தை நாட்டின் தற்போதய நிலவரங்கள் உருவாக்கியுள்ளன" என எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கை பின்வரும் முன்னெச்சரிக்கைச் சமிக்ஞைகளை எடுத்துக் காட்டுகின்றது:

அரசாங்கத்தின் சிவில் கருமங்கள் துரித கதியில் இராணுவமயமாக்கப்பட்டு வரும் நிலை, முக்கியமான அரசியல் யாப்புப் பாதுகாப்புக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் நிலை, பொறுப்புக் கூறும் நிலை எதிர்கொண்டு வரும் அரசியல் ரீதியான இடையூறு, மற்றவர்களைப் புறமொதுக்கும் கடும்போக்குச் சொல்லாடல்கள், சிவில் சமூகத்தை அச்சுறுத்துதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் பாவனை.

2020ஆம் ஆண்டு தொடக்கம் முதன்மையான நிர்வாகப் பதவிகளுக்கு ஜனாதிபதி ஆகக் குறைந்தது தற்பொழுது சேவையில் இருக்கும் அல்லது முன்னைய இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் 28 பேரை நியமனம் செய்துள்ளார் என அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

குறிப்பாக, போரின் இறுதி வருடங்களின் போது போர்க் குற்றங்களை நிகழ்த்தியிருப்பதாகவும், மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களை நிகழ்த்தியிருப்பதாகவும் ஐ நா அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த மூத்த இராணுவ அதிகாரிகள் இவ்விதம் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பாகக் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

இராணுவ தளபதியாக ஆகஸ்ட் 2019 சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நவம்பர் 2019 நியமனம் செய்யப்பட்டமை என்பனவும் இதில் அடங்குகின்றன.

சிவில் கருமங்களில் ஊடுருவல் செய்து, மிக முக்கியமான நிறுவன ரீதியான பரீட்சிப்புக்கள் மற்றும் சமப்படுத்தல்கள் என்பவற்றை இல்லாமல் செய்து, ஜனநாயக வெற்றிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நீதித்துறை மற்றும் ஏனைய முதன்மையான நிறுவனங்கள் என்பனவற்றின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்தி வந்திருக்கும் இணையான இராணுவச் செயலணிகளையும், ஆணைக்குழுக்களையும் அரசாங்கம் உருவாக்கி இருப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

மேலும், சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட தரப்புக்கள் மீதான தீவிரமான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் என்பவற்றைக் கொண்ட ஒரு போக்கு நிலவி வருவதனையும், சுயாதீனமான ஊடகங்களுக்கான வெளிச் சுருங்கி வருவதனையும் அது ஆவணப்படுத்தி உள்ளது.

குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச உளவு அதிகாரிகள் ஆகிய பாதுகாப்புச் சேவைகளின் பரந்த பிரிவினரால் அத்தகைய துன்புறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாக 40 இற்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் அறிக்கையிட்டுள்ளன.

"மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள், இதழியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்திலான அரச முகவர்களின் விஜயங்களையும் உள்ளடக்கிய விதத்தில் அனைத்து வடிவங்களிலுமான கண்காணிப்புகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உயர் ஆணையாளர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்" என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரல் தொடர்பான தனது கடப்பாட்டினை அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்த போதிலும், தேசிய நோக்கு மற்றும் அரசாங்க கொள்கை தொடர்பான அறிக்கைகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை தரப்புக்கள் அதிகரித்த அளவில் புறமொதுக்கப்பட்டு வருவதாகவும், உள்வாங்கப்படுவதில்லை என்றும் அது எச்சரிக்கின்றது.

அரசின் உயர் மட்ட அதிகாரிகளிடம் நிலவி வரும் பிரித்துப் பார்க்கும் பிரிவினைவாத இயல்பிலான, பாரபட்சம் காட்டக் கூடிய விதத்திலான சொல்லாடல்கள் மேலும் துருவ நிலைப்படுத்தல் மற்றும் வன்முறைகள் என்பவற்றை உருவாக்கக் கூடிய அபாயத்தை கொண்டுள்ளது.

இலங்கையின் முஸ்லிம் சமூகம் கொவிட் - 19 பெருந்தொற்றின் பின்னணியிலும், ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்தும் அதிகரித்த அளவில் இலக்காக கொள்ளப்பட்டு வருகின்றது.

நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு, குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான, ஆழமான பாரபட்சம் மற்றும் புறமொதுக்கல் என்பன இடம்பெற்று வந்த ஒரு பின்புலத்தில் இலங்கையின் ஆயுதப் போராட்டம் எழுச்சியடையந்தது என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

அனைத்துத் தரப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பன தொடர்ச்சியான பல ஐ.நா அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றில் நீதிச் செயன்முறைக்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், தன்னிச்சையாக தடுத்து வைத்தல், அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் மீதான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை என்பனவும் அடங்குகின்றன.

ஒன்றன் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களினால் நியமனம் செய்யப்பட்ட பெருந்தொகையான விசாரணை ஆணைக்குழுக்கள் அத்துமீறல்கள் தொடர்பான உண்மையை நம்பகமான விதத்தில் நிரூபிப்பதற்கும், பொறுப்புக் கூறலை உத்தரவாதப்படுத்துவதற்கும் தவறியிருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

முன்னைய ஆணைக்குழுக்களின் முடிவுகளை மீளாய்வு செய்வதற்கென அரசாங்கம் இப்பொழுது புதிய ஆணைக்குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. ஆனால், அதன் அங்கத்துவ உள்ளடக்கம் பன்முகத்தன்மை மற்றும் சுயாதீனம் என்பன இல்லாததாக இருந்து வருவதுடன், அதன் குறிப்பு நியதிகள் அது ஏதேனும் பயனுள்ள பெறுபேறுகளை எடுத்து வருமா என்பது குறித்த நம்பிக்கையைத் தூண்டவில்லை.

அரசாங்க உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் ஏனையோர்; 'அரசியல் பழிவாங்கலுக்கு' உட்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதனை விசாரணை செய்வதற்கென ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்டிருப்பதுடன், அது பல உயர் மட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் வழக்குகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் விசாரணைகளையும், நீதிமன்ற நடைமுறைகளையும் உதாசீனம் செய்துள்ளது.

முக்கியமான பல குறியீட்டு ரீதியிலான மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாகப் புலன் விசாரணைகளை நடத்தியிருந்த குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் முன்னைய தலைமை அதிகாரி;களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளையில், இப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு பரிசோதகர் முக்கியமான பல குறியீட்டு வழக்குகளில் புலன் விசாரணைகளில் தான் வகித்து வந்த முன்னணி பங்கு குறித்து பழிவாங்கல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் இலங்கையை விட்டு வெளியேறியிருப்பதுடன் இப்பொழுது குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருகின்றார்.

'இலங்கையின் குற்றவியல் நீதி முறைமை நீண்ட காலமாகத் தலையீடுகளை எதிர்கொண்டு வந்திருக்கும் ஒரு துறையாக இருந்து வந்திருக்கும் அதேவேளை, தற்போதைய அரசாங்கம் பொறுப்புக் கூறும் நிலையைத் தடுக்கும் பொருட்டு கடந்த காலக் குற்றச் செயல்கள் தொடர்பாக இடம்பெற்று வரும் புலன் விசாரணைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் என்பவற்றை முனைப்பாக தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு முன்வந்துள்ளது' என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

கடந்த காலம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கும் நிலை தமக்கு நீதியும், இழப்பீடுகளும் கிடைப்பதுடன், - மற்றும் தமது அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதி குறித்த உண்மை தெரிய வேண்டுமென வலியுறுத்திவரும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் மீது மோசமான தாக்கங்களை எடுத்து வந்திருப்பதாக ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சலி பெச்லட் வலியுறுத்தியுள்ளார்.

"நீதிக்கென பாதிக்கபட்டவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் திடசங்கற்பத்துடன் கூடிய விதத்தில் துணிச்சலாக, தொடர்ச்சியாக எழுப்பிவரும் வேண்டுகோள்களுக்கு செவிமடுக்க வேண்டுமெனவும், இனிமேலும் இடம்பெறக் கூடிய அத்துமீறல்கள் குறித்த முன்னெச்சரிக்கைச் சமிக்ஞைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நான் சர்வதேசச் சமூகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடும் பெச்லெட் ஐ.நா உறுப்பு நாடுகள் திட்டவட்டமான விதத்தில் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.

"தேசிய மட்டத்தில் பொறுப்புக் கூறலை எடுத்து வரும் விடயத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம் எடுத்துக் காட்டியிருக்கும் இயலாமை மற்றும் விருப்பமின்மை என்பவற்றின் பின்னணியில், சர்வதேசக் குற்றச் செயல்கள் தொடர்பாக நீதியை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு சர்வதேச நடவடிக்கைகளுக்கான தருணம் தற்பொழுது வந்துள்ளது. மேலும், அரசுகள் பிராந்தியத்துக்கு வெளியிலான அல்லது அகிலம் தழுவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமது தேசிய நீதிமன்றங்களில் இலங்கையில் அனைத்து தரப்புக்களினாலும் மேற்கொள்ளபட்டிருக்கும் சர்வதேசக் குற்றச் செயல்கள் தொடர்பாக புலன் விசாரணைகளையும், வழக்குத் தொடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும்" என பெச்லெட் குறிப்பிட்டுள்ளார்.

"பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றை நிகழ்த்தியிருப்பதாக நம்பகமான விதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக அவர்களுடைய சொத்துக்களை முடக்குதல் மற்றும் பிரயாணத் தடைகள் போன்ற இலக்கு வைக்கப்பட்ட தடைகளை அரசுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

ஐ. நா அமைதி காக்கும் படைகளின் செயற்பாடுகளில் இலங்கையின் பங்களிப்புக்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென" உயர் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால பொறுப்புக் கூறல் செயன்முறைக்கான சாட்சியங்களைச் சேகரித்து வைப்பதற்கும், பாதுகாப்பதற்குமென அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் ஒரு பதவியை உருவாக்குவதற்குப் பேரவை ஆதரவளிக்க வேண்டும் எனவும் பெச்லெட் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆழமான விதத்தில் வேரூன்றியிருக்கும் கட்டமைப்புசார் தண்டனை விலக்குரிமையை கவனத்திலெடுத்து, சிவில் சமூகத்துக்கான வெளியைத் தாக்கமான விதத்தில் உத்தரவாதப்படுத்தினால் மட்டுமே இலங்கை நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பவற்றை சாதித்துக் கொள்ள முடியுமென ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

"அவ்வாறு செய்யத் தவறும் நிலை எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போக்குகள் தோன்றுவதற்கும், மீண்டும் மோதல்கள் உருவாவதற்கான விதைகளை ஊன்ற முடியும்" என அவர் கூறினார்.

இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் ஐ. நா மனித உரிமைகள் அலுவலகம் அரசாங்கத்திற்கு விரிவான கேள்விகளை அனுப்பிவைத்து, எழுத்து மூலமான பதில்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. அதனையடுத்து, 2021 ஜனவரி மாதம் 07 ஆம் திகதி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் இணைய வழியிலான விரிவான ஒரு சந்திப்பும் நடத்தப்பட்டது. அரசாங்கமும் இந்த அறிக்கை தொடர்பாக தனது கருத்துக்களை முன் வைத்துள்ளது.

இந்த அறிக்கை பெப்ரவரி 24 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் முறையாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனையடுத்து தரப்புக்களுக்கு இடையில் ஒரு பரஸ்பர உரையாடல் இடம்பெறும்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK