முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்: அரசாங்கம் அனுமதி வழங்கியதாக பொய்யான தகவல்


கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தடையை சர்வதேச ரீதியான தரங்களை பொருட்படுத்தாமல் அரசாங்கம் நீக்கியுள்ளதாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்ததாக வெளியான தகவல்கள் பொய்யானவை என இலங்கை சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

உயிரிழக்கும் முஸ்லிம்களின் இறுதி சடங்கை நடத்துவதற்கான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்காக, நன்றி தெரிவிப்பதாக நேற்று முன்தினம் (09) ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களுக்கு எழுதிய கடிதத்தில், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ராசிக் தெரிவித்திருந்தார்.

தற்போதைய அறிவியல் மற்றும் தொழிநுட்ப உண்மைகளின் அடிப்படையில் யாராவது இறந்தால் அந்த உடல் தகனம் செய்யப்படும் என நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த ஜயருவன் பண்டார, தௌஹீத் ஜமாத் அமைப்பின் அறிவித்தலையும் நிராகரித்துள்ளார்.

விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், சுகாதார அமைச்சு இதுவரை அவ்வாறான ஒரு தீர்மான்ததை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

"கொரோனா உடல்கள் தகனம் செய்யப்படும். அறிவியல் மற்றும் தொழிநுட்ப உண்மைகள் இரண்டின் அடிப்படையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தீர்மானத்தை அறிவித்தார். இந்த விடயங்களை அடிப்படையாக கொண்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ”

புதிய கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய தற்போதைய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

“இலங்கை முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு, முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்” என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இது குறித்து எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை.

கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதி சடங்குகள் குறித்து இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு பக்கச்சார்பற்ற நிபுணர் குழுவை நியமிக்குமாறு வைத்திய நிபுணர்கள் விடுத்த வேண்டுகோள் தொடர்பில் ஆறு மாதங்கள் கடந்தும் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தாமைத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அண்மையில் கவலை தெரிவித்தன.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றை புறந்தள்ளி கொரோனா தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஆராய்வதற்காக குழுவை நியமிப்பது தொடர்பில் ஆறு மாதங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டது.

நவம்பர் 4ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கையில் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான மனித உரிமையை விரைவில் அனுமதிக்குமாறு நீதி அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததோடு, இறந்த ஒன்பது முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ள விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

“இன்று ஒன்பது பேர். நேரம் செல்ல செல்ல இது அதிகரிக்கும். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது அரசியல் அல்ல. நீங்கள் இறந்தால், நீங்களும் எரிக்கப்படுவீர்கள். நான் இறந்தால், நான் எரிக்கப்படுவேன். அதைப் பற்றி சிந்தியுங்கள்.” என முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

கொரோனா மரணம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு அமைய புதைப்பது அல்லது தகனம் செய்வதன் மூலம் இறுதிச் சடங்குகளை நடத்தலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ள போதிலும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு பிரிவினைவாத தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி அமைச்சர் நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் மக்களுக்கு பிரச்சினை இருந்தாலும், அதை அரசியல் மயப்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார்.

கொரோனா தொற்றுநோய் பரவலுடன் இணைந்தாக மேற்கொள்ளப்படும் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு உலகின் சக்திவாய்ந்த இஸ்லாமிய அமைப்பு இலங்கைக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்டித்திருந்த 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), சமூகத்தின் உரிமைகள் மற்றும் கௌரவங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK