கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய புள்ளிகள் சிலர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு மிகுந்த ஓய்வறைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, தங்காலை பிரதேச சபை முன்னாள் தலைவர் சம்பத் வித்தாணபத்திரன,
விளக்கமறியல் கைதி சட்டத்தரணி அஜித் பிரசன்ன உள்ளிட்ட முக்கிய சிலர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறை வைத்தியசாலை என்கின்ற ஓய்வுப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதிகள் 200 இற்கும் மேற்பட்டவர்கள் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெற்றிடம் ஏற்பட, மேற்படி உறுப்பினர்கள் அங்கே மாற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரச மேல் மட்டத்திலிருந்து வந்த கட்டளைக்கு அமையவே இந்த நடவடிக்கையை சிறைச்சாலை தலைமையகம் உடன் மேற்கொண்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறை மற்றும் போகம்பர சிறையில் இதுவரை 108 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.