கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 34இலங்கையர்கள், நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  அவர்கள் வந்தடைந்துள்ளனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ்லிருந்து 12 பேர், கட்டாரிலிருந்து 22 பேர் இவ்வாறு  நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்துள்ள அனைவருக்கும், பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து 14 ஆயிரத்து 285ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 370 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.