கொவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் நேற்றைய தினம் முதல் சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்டினால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் அமைச்சரவையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது குறித்து சுகாதாரத் தரப்பினர் மற்றும் உரிய தரப்பினர் அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து ஜனாசா நல்லடக்கங்களை ஓர் உலர் பிரதேசத்தில் மேற்கொள்வது குறித்த சாத்தியப்பாடுகள் குறித்து நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது எனவும், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

(tamilwin)