ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு


பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதர் ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், எதிர்காலத்தில் மேலும் பலரை கைது செய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணைகளின் ஊடாக ரியாஜ் பதியூதீனுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என சமல் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், தடுத்து வைத்து விசாரணை நடத்தும் உத்தரவை ரத்து செய்வதற்காக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ரியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்டதாகவும் சமல் ராஜபக்ஷ கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் எந்தவிதத்திலும் நேரடியாக தொடர்புப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுத்தாரி, தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சுமார் 3 மாத காலத்திற்கு முன்னரே ரியாஜ் பதியூதீனுக்கு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொழில் நிமிர்த்தமே இந்த தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post