பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!


திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“எதிர்காலத்தில், நாட்டுக்குத் தேவையான நல்லதொரு தலைமைத்துவத்தையும் சிறந்த ஆட்சி, அதிகாரத்தையும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, குருநாகல் மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நாம் கலந்துரையாடி, அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம்.


தற்போது நாட்டில் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பொருட்களுடைய விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மிகவும் பாரதூரமான கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வற் வரியினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டும். அரிசி, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள். எனவே, இவற்றுக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.


அத்துடன், திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் சுயநலத்திற்காகவும் தங்களுடைய கட்சி அரசியலை மேற்கொள்வதற்காகவுமே பயன்படுத்தப்பட்டமையை நாம் அறிவோம். எனவே, நாட்டுக்கு நன்மைபயக்கக் கூடியதாக, அரசியல் இலாபத்துக்காக எந்தவொரு இனத்தையும் மதத்தையும் குறிவைக்காமல் செயல்படக்கூடிய ஒரு சட்டமாக அது அமைந்தால் ஆதரவு வழங்குவோம். அவ்வாறின்றி, சுயநலத்திற்காகவோ அல்லது வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான திருத்தப்பட்ட சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்டத் தலைவருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் இளைஞர் அமைப்பாளர் அசார்தீன், மத்திய குழு செயலாளர் அன்பாஸ் அமால்தீன் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் இர்பான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK