வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் (20) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“வர்த்தமானியால் 1984க்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, வெளியிடப்பட்ட வர்த்தமானியால் பொதுமக்களின் அதிகளவான காணிகள் வன இலாகாத் திணைக்களத்திடமும் படையினரிடமும் சென்றுள்ளன. வதிவிடக்காணிகள், மேய்ச்சல் காணிகள் மற்றும் மேட்டுநில ஜீவனோபாயக் காணிகள் என்பவையே இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 85 வீதமான காணிகள் வன இலாகாவுக்கும் எஞ்சிய 15 வீதக் காணிகள் மக்களுக்கும் கிடைத்துள்ளன.
முசலிப் பிரதேச மக்கள் 1990இல் புலம்பெயர்ந்து, 2009க்குப் பின்னர் சொந்த இடங்களுக்கு வந்தபோது, அவர்களது காணிகளில் 85 வீதமானவை வன இலாகாவிடம் சென்றிருந்தது. இதனால், எஞ்சிய காணிகளிலே வாழவும் தொழில்புரியவும் இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிக்குளம் மற்றும் சிலாவத்துறை கிராமங்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியிலுள்ள முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, முசலி, கொண்டச்சி சிலாவத்துறை மற்றும் அரிப்பு பாலம் போன்ற பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்வோர் கைதாகி அபராதம் விதிக்கப்படுகின்றனர். மோதர கம்மான ஆற்றுப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வோர் கைதாகி அபராதம் விதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு ஐநூறு ரூபா உழைக்கும் இம்மக்களிடம், ஐம்பதாயிரம் ரூபா அபராதம் அறவிட்டால் இவர்கள் எங்கே செல்வது?
கொண்டச்சி குளத்தின் புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பப்பட்டுள்ளது. இந்தக் குளம் வன இலாகாவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் புனரமைக்க முடியாதென அறிவித்துள்ளனர்.
இதேபோன்றுதான், அக்கரைப்பற்று வட்டமடுக் காணியையும் வன இலாகா பிடித்துவைத்துள்ளது. இதில் 480 ஏக்கரையாவது விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். இதை மீட்பதற்காக உழைத்த விவசாயிகளில் பலர் இறையடிசேர்ந்தும் விட்டனர்.
மன்னாரில் தேசிய மீலாத் விழா கொண்டாடப்படவுள்ளது. எனினும், இப்பகுதியில் எந்த அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை. தேசிய மீலாத் விழா இடம்பெறும் பகுதிகள் அபிவிருத்திச் செய்யப்படுவதே வழமை. ஆனால், இப்பகுதியில் பள்ளிவாசல்கள் கூட அபிவிருத்திச் செய்யப்படவில்லை. கோமாளியாக உள்ள பிரதேச செயலாளரை வைத்துக்கொண்டு சிலர், தமக்கேற்றவாறு மகுடி ஊதுகின்றனர்.
ஆகக்குறைந்தது எங்களால் திறக்கப்பட்ட புத்தளம், மன்னார் பாதையையாவது மீளவும் திறந்து தாருங்கள். மக்களின் போக்குவரத்துச் சிரமங்கள் இதனால் நூறு கிலோமீற்றர் குறையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK