உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கேரள மாநில பொலிஸார் ஆகியோர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த 2009 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் Kasaragod பகுதிக்கு விஜயம் செய்தமை மற்றும் அவரை இலங்கையில் சந்தித்த கேரள மதத் தலைவர்களுடன் தொடர்பை பேணியமை ஆகியன குறித்து இந்திய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் 2013 ஆம் ஆண்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கும் குறிப்பாக சென்னைக்கும் விஜயம் செய்தமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய உளவுத் துறையினரின் தகவல்களின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் தந்தை கேரளாவின் Kasaragod பகுதியிலுள்ள Padna வைச் சேர்ந்தவர்களினால் பாராட்டப்பட்டுள்ளார் எனவும், அவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலருடன் தொடர்புகளைப் பேணி வந்தார் எனவும், தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கமைய, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் ISIS அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பைப் பேணிய ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தமிழகத்தில் கைது செய்யப்பட்டதாகவும், இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குறித்த கேரள தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டில் கேரளாவின் Kasaragod பகுதியிலுள்ள Padna வைச் சேர்ந்த 5 குடும்பங்கள் காணாமல் போனதாகவும், அவர்கள் ISIS அமைப்பின் பயிற்சி பெறுவதற்காக சிரியாவுக்கு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் சிரியா செல்வதற்கு முன்னதாக, இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்திடம் மதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும், இது தொடர்பிலும் இந்திய புலனாய்வுப் பிரிவு ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.