வெற்றிடமாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகிமாகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற அமர்வு நேற்று (07) காலை ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சபையில் இதனை அறிவித்திருந்தார்.

´சட்ட ஆலோசனைக்கு அமைவாக , அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கமைய, 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 64(1) இற்கு அமைய, 9ஆவது பாராளுமன்றத்தின், கம்பஹா தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஏ. ரஞ்சன் லியோ சில்வஸ்டர் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையானது, அரசியலமைப்பின் 66 (D) இற்கு அமைய வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.´ என்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சபையில் அறிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, கடந்த ஜனவரி மாதம், 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கடந்த 3 மாதங்களாக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலையைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி இவ்வாறு செயலற்று போவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த ஆசன வெற்றிடத்திற்காக அஜித் மானப்பெரும இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.