“ நான் உரையாற்றும் போது சமல் ராஜபக்ச என்ற முட்டாள் எழுந்து தன்னுடன் சண்டைக்கு வருமாறு அழைத்தார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனக்கும், அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

அன்றைய சபாநாயகரை விமர்சித்து, நான் மூன்று மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில, என்னை நாடாளுமன்றத்திற்கு வர அனுமதிக்கவில்லை, என்னை சிறையில் அடைத்து வைத்திருந்தனர் என கூறும் போது, சமல் ராஜபக்ச என்னை தன்னுடன் சண்டைக்கு வருமாறு அழைத்தார். நடக்க முடியாத நபருடன் சண்டையிட்டு, அவர் இறந்து போனால், அதன் பின்னர் எங்களுக்கு எதிராக கொலை வழக்கு வரும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அமைச்சர் “ வெளியில் வா. வெளியில் வா, வெளியில் வா காட்டுகிறேன்” என விடுத்த சவாலுக்கு பதிலளிக்கும் போதே பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கும் சமல் ராஜபக்சவுக்கு இடையில் நடந்த இந்த வாக்குவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக காணொளியை பதிவேற்றம் செய்திருந்தார்.

சரத் பொன்சேகா, அமைச்சர் சமல் ராஜபக்சவை கழுதை என கூறி திட்டியதையும் காணொளியில் காணக் கூடியதாக இருந்தது.