வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதன்படி தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார். நடுநிலை வகித்த நாடுகளின் வாக்குகளையும் இணைத்து கணக்குச் சூத்திரம் தயாரித்துள்ளார்.

அப்படியானால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. எனக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. 27 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச் சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே வெற்றி" - என்றார்.