முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், பரிந்துரைகளை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் செவ்வாய்கிழமை (9) பாராளுமன்றத்தில் உறுப்புரை 27/2 இன் கீழ் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் பல தனியார் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக, முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பிலும், அதில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை நீதி அமைச்சருக்கு சமர்பிக்கப்பட்டிருக்கின்றது. அது தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்பிக்க ஏற்பாடாகியிருப்பது அறிந்த விடயம்.

முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண்களுக்கு அநீதி ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதுதொடர்பாக ஆராய்ந்து, நாட்டின் பொதுவான சட்டத்துக்கு சமமாக திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம்.

ஆகையால், நீதி அமைச்சருக்கு நாங்கள் சமர்பித்திருக்கும் திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்தன தேரர் பிரஸ்தாப முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாகவும், முறைக்கேடுகள் நடப்பதாகவும் பலவாறாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனதையடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் எழுந்து மேற்கண்டவாறு பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்னி பெர்னான்டோ புள்ளேயும் பிரஸ்தாப சட்டத்தின் விளைவாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அங்கு உரையாற்றும் போது, முஸ்லிம் தனியார் சட்டம் மாத்திரமல்ல, நாட்டில் கண்டிய சட்டம், வடக்கில் தேசவழமை சட்டம்  என இருக்கின்றது என்பதாகவும் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.