அந்தப் பிள்ளைக்குத் தேவையாக இருந்தது ஒரு மடிக் கணினி!




தேவையாக இருந்தது ஒரு மடிக் கணினி! அதற்காகத்தான்  சிரச லட்சாதிபதி நிகழ்ச்சியில் போட்டியிட அவர் வந்திருந்தார். அது தனது கல்வித்  தேவைக்காக என்று அவர் கூறியதை நிச்சயமாக நம்ப முடியும். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குருட்டாம் போக்கில் பதிலளிக்காமல் அவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்துரைத்து, ஆராய்ந்து பதிலளித்த விதம் அந்தப் பிள்ளை கற்றலில் ஆர்வமுள்ளவர் என்பதற்குச் சான்று. 

Incognito modeல் இங்கிதமற்ற விடயங்களை பார்ப்பதற்காக லெப்டொப் கேட்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

இந்த லெப்டொப்பை, அவரை விமர்சிக்கும் "மார்க்கக் காவலர்கள்" வாங்கிக் கொடுத்திருந்தால் ஒருவேளை அவர் இந்த நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்திருக்கக்கூடும். 

சரி பரவாயில்லை, மடிக்கணினியோ ஸ்மார்ட் ஃபோனோ வாங்க வசதியின்றி இன்னும் எத்தனையோ ஷுக்ராக்கள் உள்ளனர். இவர்களில்  பலர் வகுப்புக்களில் இருந்து விலகியுள்ளனர்.  இவர்களுக்காவது இந்த மார்க்கக் காவலர்கள் இவற்றை வாங்கிக் கொடுத்து இப்படியான நிலைமைகளைத் தவிர்க்கலாம்!

அந்தப் பெண்ணை டீவியில் பார்க்கும்போது அவரது மொழிப் புலமையும் அறிவாற்றலுமே என் கண்ணுக்குத் தெரிந்தது. தேவாரப்பெருமவுக்கு மகளாகவே  தெரிந்திருக்கக்கூடும். 

காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாம். அந்தப் பிள்ளையிடம் இவர்களது கண்கள் குறையை மட்டும்தான் துலாவித் துலாவிப் பார்த்திருக்கின்றன. கோளாறு பெண்ணிலா.. அல்லது இவர்கள் கண்ணிலா!

சமூகத்தில் பெண்கள்படும் அவஸ்தைகள் எத்தனையெத்தனையோ.. உபயோகமற்ற கணவர்கள் காரணமாக வீட்டுப்  பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குப் போய் சொல்லொணா துன்பம் அனுபவிக்கும் பெண்கள், வீதிகளில் பிச்சைப் பாத்திரமேந்தும் பெண்கள், மணமுடித்து சில மாதங்களிலேயே வாழாவெட்டியாகிப் போன பெண்கள்..  ஆனால், இந்தக் காவலர்கள் தேடுவது இவர்களெல்லாம் தலையை மூடுகிறார்களா, முகத்தை மறைக்கிறார்களா என்பதை மட்டும்தான். 

இந்தப் பெண்களை குறை சொல்வதை விடுத்து இவர்களின் நல்வாழ்வுக்கு ஏதும் முயற்சி செய்தீர்களாயின் இரட்டிப்பு கூலிக் கிடைக்கும். 

மார்க்கக் காவலர்களில் எத்தனைப் பேர் லீஸிங் எடுக்காமல் வாகனங்களை வைத்திருக்கிறீர்கள்; காசோலைகளை பவுன்ஸாகவிடாமல் கொடுப்பனவை செய்கிறீர்கள்; சீதனம், கைக்கூலி வாங்காமல் மணம் முடித்திருக்கிறீர்கள்; வருமானம் ஹலாலாக இருப்பதில் பேணுதலாக இருக்கின்றீர்கள்; பெண்களுடன்  கடலைப் போடாமலும் ஃபோனில் incognito  modeல் பலானதைப் பார்க்காமலும் இருந்திருக்கிறீர்கள்?

அப்படியானவன் முதல் கல்லை எறியட்டும்!

அவரை விமர்சிக்கும் எமது பெண் prefect மார்  தாம் perfect தானா என்பதை முதலில் உறுதி செய்துவிட்டு கையில் கவண் எடுக்கட்டும். 

நிச்சயமாக நீங்கள் தமிழிலிடும் பதிவுகளை அவர் வாசிக்கப் போவதில்லை.

நீங்கள் சீலர்கள் என்பதை தமுக்கடிப்பதற்காக இங்கு பதிவுகளிட்டு அவரை மானபங்கம் செய்ய வேண்டியதில்லை. அவரது முக்காடு  சற்றே விலகியதற்காக நீங்கள் துச்சாதனர்களாக  மாறி துகிலுரிய வேண்டியதில்லை. 

ஆனால், உங்கள் செய்தியை அவரிடம் தெரியப்படுத்த விரும்பினால் அதை பகிரங்கமாகவன்றி  நேரடியாக அல்லது கடிதம் மூலம் எடுத்துரைக்க முயற்சிக்கலாம். 

பிர்அவ்னிடம் செல்லுமாறு மூஸா நபிக்கு கட்டளையிட்ட அல்லாஹ் அவனிடம் மென்மையாக நடக்குமாறு அவருக்கு அறிவுறுத்துகிறான். அவனுக்கெதிராகப் பிரசாரம் செய்யவோ கடுமையாக நடக்கவோ கட்டளையிடவில்லை. குர் ஆனை கற்றிருந்தாலேயன்றி இதனை நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

தமிழில் ஒரு வசனத்தைத்தானும் பிழை விடாமல் எழுதத் தெரியாத உங்களில் பலருக்கு ஷுக்ரா பேசுவதைப் போன்று சிங்களத்தில் அழகான முறையில் பேசிப் புரிய வைக்கத்தான் முடியுமா?

ஷுக்ரா போன்ற பெண்களுக்கு  அழகான முறையில்,  நளினமாக  எடுத்துக் கூறுவதை விடுத்து ஆளாளுக்கு உங்கள் மார்க்க பக்தியை காண்பிப்பதற்காக கம்பு சுத்தினால்.. நிச்சயமாக நீங்கள் இன்னொரு தஸ்லீமா நஸ்ரினை அல்லது மலாயாவை உருவாக்க முனைகிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!

விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உம் இறைவனின் பாதையின் பக்கம் அழைப்பீராக... (16:125)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK