பொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்? – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!


இஸ்லாம் பற்றி பூரண அறிவைப் புரிந்துகொள்ள, புனித அல்குர்ஆனுடன் சேர்த்து, அது அருளப்பட்ட பூரண பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் நல்லெண்ணத்துடன் அமைச்சர் உதய கம்மன்பில படிக்க வேண்டுமென ரிஷாட் எம்.பி தெரிவித்தார்.

அமைச்சர் உதயகம்மன்பில அண்மையில் பாராளுமன்றத்தில் குர்ஆன் தொடர்பில் கூறிய கருத்துக்கு தெளிவூட்டும் வகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று (20) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,   

இந்த அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையைப் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

60,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக இந்த அரசாங்கம் கூறி வருகின்றது. 2019.12.31 க்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகளில், சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தராதரம் இருந்தும் இன்னும் நியமனம் கிடைக்காது துன்பப்படுகின்றனர். இந்த வருடம்  ஜனவரி 05இல் வந்த பட்டியலிலும் இவர்களின் பெயர் இல்லையென்று முறையிட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவே, இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியமனங்களை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் தேர்தல் உதவி ஆணையாளர் ஜெனிட்டர், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே, புத்தளத்தில் கொத்தணி மூலம் வாக்களித்த 7000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை, அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தி, திட்டமிட்டு இடாப்பிலிருந்து நீக்கியுள்ளார். இதற்கு நியாயம் கேட்டு தேர்தல் திணைக்களத்திடமும், மனித உரிமைகள் ஆணையகத்திடமும் எழுத்துமூலம்  வேண்டுகோள் விடுத்துள்ளோம். எனவே, இந்த உயர் சபையின் ஊடாகவும் இந்த வேண்டுகோளை விடுப்பதுடன், இவ்வாறான மோசமான அதிகாரிகளை, மக்கள் இன ஒற்றுமையுடன் வாழும் மாவட்டங்களில் இருந்து இடமாற்றுமாறும், அவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

பாதிக்கப்பட்ட இந்த வாக்காளர்கள் நாட்டில் எங்குமே வாக்களிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு மேற்கொள்வதற்கான திகதி முடிவடைந்துள்ளதால், ஆகக் குறைந்ததது 31ஆம் திகதி வரை அதனை நீடித்து, அவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்குமாறு இந்த உயர் சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக அட்டுளுகம பிரதேசம் 56 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. வியங்கல்லை என்ற பிரதேசம் 40 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி 17 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், சமூகவலைத்தளங்களில் சில பதிவுகளைக் காண முடிகின்றது. முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிறுவனங்கள், கடைத் தொகுதிகள் உள்ள பிரதேசங்கள் முடக்கம் செய்யப்பட்டு, அந்தப் பிரதேசத்துக்கு அணித்தாக மற்றையவர்கள் இருக்கும் பிரதேசங்கள் முடக்கப்படாது, வியாபாரம் நடப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, இவ்வாறான அரசின் நடவடிக்கைகள் இனவாதத்தின் உச்சமாக இருக்கலாமோ? என எண்ணி வேதனைப்படுகின்றேன். எனவே, இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாமென வேண்டுகின்றேன்.

முஸ்லிம் சமூகம் சொல்லொணா வேதனைகளுடன் வாழ்கின்றது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருடங்கள் இந்த நாட்டிலே நாம் வாழ்கின்றோம். நாட்டின் இறைமைக்கும், ஒற்றுமைக்கும், ஏன் சுதந்திரத்துக்கும் கூட பாடுபட்டது இந்த சமூகம். எனினும். கொரோனவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம். கண்ணுக்கு முன்னே ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற நிபுணர்களும், இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவ வல்லுனர்களும் அடக்க முடியுமென சொன்ன பிறகும் இந்த அரசாங்கம், எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒரு பெரிய நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். கடந்த சனிக்கிழமை கூட இரண்டுமாதக் குழந்தை ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. 20 நாள் குழந்தையையும் எரித்தீர்கள். இப்போது சமூகம் உச்ச வேதனையில் இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் அண்மையில் பேசிய உதயகம்மன்பில, அல்குர்ஆனை தான் படித்ததாகக் கூறியுள்ளார். “மையத்துக்களை எரிப்பது ஹராம் என எங்கும் கூறப்படவில்லை” என்றும் கூறியுள்ளார். அவரிடம் நான் மிகவும் அன்பாகத் தெரிவிக்க விரும்புகின்றேன், அல்குர்ஆனை மாத்திரமல்ல, ஹதீசையும் சேர்த்துப் படியுங்கள். நல்லெண்ணத்துடன் இவைகளைப் படித்தால் சரியான தெளிவைப் பெறுவீர்கள்” என்று கூறினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK