கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த காலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடைய சடலத்தை தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறை ஒன்றில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி, குறித்த சடலத்தை தகனம் செய்யாமல் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வரும் வரையில் கராபிட்டிய வைத்தியாசலையில் உள்ள அதி குளிரூட்டப்பட்ட அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

காலி, தேதுகொட பகுதியை சேர்ந்த 84 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

குறித்த நபரின் சடலத்தை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் தகனம் செய்யுமாறு கராபிட்டிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் சந்திரசேன லொகுகே உத்தரவிட்டிருந்ததுடன், உயிரிழந்த நபரை தகனம் செய்வதாயின் சடலத்தை பொறுப்பேற்க முடியாது என அவருடைய மகன் தெரிவித்திருந்தார்.