நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வேலைத் திட்டங்களை கல்முனை பிராந்தியம் முழுவதும் அமுல்படுத்தி வருகின்றோம்

 பைஷல் இஸ்மாயில் -

கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் சுதேச மருத்துவ முறையின் மூலம் பல்வேறு வேலைத் திட்டங்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் பணிப்புரைக்கமைவாகவே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக, மக்களின் தொற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று முஹம்மதியா புர மருந்து உற்பத்திப் பிரிவில் விஷேடமாக தயாரிக்கப்பட்ட மூலிகைப் பானம் தற்போது கல்முனைப் பிராந்தியம் முழுவதும் முற்றிலும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

இந்த நோய் எதிர்ப்புப் பானத்தை அருந்தியவர்கள் பல  நன்மைகளை அடைந்துள்ளதாகவும் அதனால் குறித்த நோய் எதிர்ப்பு மூலிகைப் பானத்தை மீண்டும் வழங்கக் கோரியுள்ளனர். என கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.

கொவிட் தொற்றிலிருந்து சுதேச மருத்துவ முறையில் பொது மக்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொவிட்-19 தொற்றிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் பல்வேறான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைவாக சுதேச மருத்துவ முறையின் மூலம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வேலைத் திட்டங்களை கல்முனை பிராந்தியம் முழுவதும் அமுல்படுத்தி இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

கொவிட் 19 தொற்று நோயினால் கல்முனைப் பிராந்தியத்தில் அதன் பரம்பல் தற்போது கூடிக்கொண்டே செல்கிறது. இதில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்ட பிரதேசங்களாக இருக்கின்றன. அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களின் நோய்த் தொற்று எதிர்ப்பை அதிகரிக்கச் செய்யும் சபுவே ஜோசான் எனும் மூலிகைப் பானப் பொதிகளை வீட்டுக்கு வீடு சென்று அவர்களின் காலடியில் வழங்கி வரும் செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வழங்கி வருகின்றோம்.

கொவிட் தொற்று முதலாம் அலையின்போது கல்முனைப் பிராந்தியத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வாறான மூலிகைப் பொதிகளை வழங்கியுள்ளோம். தற்போது இரண்டாம் அலையின் போது இதுவரை 15 ஆயிரம் குடும்பங்களுக்கான மூலிகைப் பொதிகளை வழங்கியுள்ளோம்.

எம்மால் விநியோகிக்கப்பட்டு வரும் இம்மருந்துப் பொதி நூறு சதவீதம் தூய மூலிகைகளால் தயார் படுத்தப்பட்டதாகும். இதனை அருந்துவதன் மூலம் எவ்வித பக்கவிளைவுகளும் மக்களுக்கு ஏற்படுவதில்லை. இதன் பயன்பாடுகளை அறிந்த மக்கள் தற்போது எம்மை நாடி வந்து இம்மருந்தினைப் பெற்று அருந்தி வருகின்றனர் என்றார்.

இன்று அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் 19 தொற்று நோய் எதிர்ப்பு பானம் வழங்கும் முன்னெடுப்பு நடவடிக்கையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ், வைத்தியர்களான எஸ்.அப்துல் ஹை, முஹம்மட் ஹம்ஸத், எம்.ரீ.அமீரா, என்.எப்.ஹஸ்னா, மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டு நோய் எதிர்ப்பு பானங்களை வழங்கி வைத்தனர்.BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK