அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை படுகொலை செய்யத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை கருணா அம்மானிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக அரசு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சஹ்ரானின் தாக்குதல் விடயத்தில் ஒரு புள்ளியாகப் பார்க்கப்பட்ட நாமல் குமார நேற்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

ரிஷாத் பதியுதீனைப் படுகொலை செய்ய 15 கோடி ரூபா ஒப்பந்தத்தில் திட்டமொன்று கருணா அம்மானுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மான் அரசுடன் தொடர்புபட்டவர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேண்டிய ஒரு நபர். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுக்கு முன்னர் நாமல் குமார இப்படித்தான் காணொளி, சி.டி. என்பனவற்றை வெளியிட்டார். ஆகவே, இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

பிரான்ஸிலுள்ள துஸார பீரிஸ் என்கின்ற நபரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இவ்வாறு தொடர்புபட்டிருந்தால் அவரை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.