ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்காக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பணம் வாங்கியதாக கூறப்படும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 250 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால் வழங்கப்பட்ட நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் குறித்த நியமனங்களை வழங்குவதற்காக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இலஞ்சம் வாங்கியதாக அரசின் பங்காளியாக உள்ள கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றிருந்தது.

இந் நிலையில் தற்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்காக 25000 ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த காணொளி சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

நான் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்க 25000 ரூபாய் பணம் பெற்றதாக கூறி இருட்டில் ஒரு காணொளியை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அது எங்கு எடுக்கப்பட்டது யார் எடுத்தார்கள் என்று விசாரணை செய்து பார்த்து நாங்கள் வெளிச்சத்தில் ஒரு வீடியோவை எடுத்துள்ளோம்.

இந்த வீடியோ வாகரை கட்டுமுறிவில் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை நடாத்துமாறு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். எனக்கெதிராக செயற்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த இளைஞர்கள் மீது பொலீசாரை கொண்டு அச்சுறுத்தல் விடுப்பதாக காணொளியை எடுத்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

(tamilwin)