பி.சி.ஆர்.பரிசோதனையை காரணம் காட்டி ரிஷாத் பதியுதீனின் நாடாளுமன்றம் வரும் உரிமையை தடுப்பதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட   நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்ததுபோல் சித்திரிக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20)  நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்ததுபோல் சித்திரிக்கின்றனர். ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்கமுடியாத நிலையில் உள்ளது.

நாடாளுமன்றமும் அரசும் ரிஷாத் என்ற ஒரு பெயரைச் சுற்றியே இயங்குகின்றது. நாட்டுத்தலைவரின் பெயர் உச்சரிக்கப்படுவதைவிடவும் ரிஷாத் பதியுதீன் என்ற பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது.

ரிஷாத் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் கைதானாலும் நாடாளுமன்றம் வருவதற்கான உரிமை உள்ளது. அதற்கான கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

அதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கியபோதும் ரிஷாத்துக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனக்கூறி நாடாளுமன்றம் வருவதற்கான அவரின் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் தவறான முடிவுகள் வெளிவருவதனையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்