ஹட்டன் நகரிலுள்ள சகல இறைச்சி கடைகளும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டுள்ளது.

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள், ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரமே, இறைச்சிக்கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளன.

பேலியகொட மீன்பிடி சந்தையிலிருந்து மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்வதனால், ஹட்டனிலுள்ள சகல இறைச்சி கடைகளிலிருக்கும் ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஊழியர் ​ஒருவரின் குடும்பம் ஹட்டன்-டிக்கோயா தரவளை தோட்டத்திலுள்ள வீடொன்றில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டள்ளனர் என அறியவருகிறது. அங்கு தொழில் புரிந்த அந்த நபர், கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

இதேவேளை, பேலியகொடையிலிருந்து மீன்களை கொள்வனவு செய்யும் தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளன. அந்த வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய ஊழியர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.