அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதிப் பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கடந்த 10 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 20 தொடர்பான விவாதத்திற்கு மூன்று நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

குறித்த கோரிக்கைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து இரண்டு நாட்கள் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு தினங்களும் நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் இடம்பெறும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெறாது என்பதுடன், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.