விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

தலைவரின் பூரண சம்மதத்துடனும், கட்சியின் ஆசிர்வாதத்துடனுமே 20 ஆவது சட்டத்தை ஆதரித்தோம் - ஹரீஸ்



(சர்ஜுன் லாபீர்)

தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு இன்று வந்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு ஒரு தந்திரோபாய புதிய அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் 20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தோம். அதே நேரம் இத்திருத்தச் சட்டம் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட இன்று பல்வேறுபட்ட திருத்தங்களோடு வந்து உள்ளது.குறிப்பாக அவசரகாலச் சட்டம்,மற்றும் கணக்காய்வு சம்மந்தமான சுயாதீன குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று உச்ச நீதிமன்றத்தின் 4 விடயங்களுக்கு சர்வஜன வாக்குரிமை அவசியம் என தீர்ப்பு வழங்கியமை அந்த விடயத்திற்கும் அரசு கட்டுப்பட்டு அந்த தீர்ப்பினை உள்ளடக்கியதாக ஒரு புதிய முன்னேற்றகரமான சில திருத்தங்களுடன் 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்துள்ளோம்.என முன்னாள் இராஜாங்க அமைச்சர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்து இருந்தார்.

சமூக முகநூல் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்று வாக்களித்த பின்னர் வழங்கிய பேட்டி ஒன்றின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார் மேலும் அவர் குறிப்பிடுகையில்..

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர்த்து வாக்களிக்கத்தக்கதாக நீங்கள் ஆதரித்து வாக்களித்துள்ளீர்கள் இந்த நிலைப்பாடனது கட்சியின் கோட்பாட்டை, கட்டுப்பாட்டை மீறியதாக ஆகாதா? என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது 20வது சீர்திருத்ததிற்கு எவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்ளுவது சம்மந்தமாக 20வது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட பின்பு கடந்த மாதம் உச்சபீட கூட்டம் நடைபெற்ற போது கூட நாங்கள் 5 மணித்தியாலங்களாக கலந்தாலோசித்து இருந்தோம்.

கடந்த வாரம் மீண்டும் உச்சபீடம் கூடி 20வது சீர்திருத்த சட்டமூலம் சம்மந்தமாக விவாதித்து இருந்தோம். நாடுபூராகவும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் உச்சபீடத்தில் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். அவர்களில் சிலர் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள் சிலர் இதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். ஈற்றிலே கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுவும் கூடி 20வது திருத்தச் சட்ட வாக்கெடுப்பில் புதிய திருத்தங்களும் வருகின்ற படியினால் அதை ஒப்பீடு செய்து கட்சியின் பாராளுமன்ற குழு அதனை தீர்மானிக்க முடியும். என்ற அங்கீகாரத்தினை கட்சியின் உச்சபீடம் கடந்த வாரம் வழங்கி இருந்தது.எனவே 20 வது திருத்த விவாதம் தொடங்கியதில் இருந்து புதிய திருத்தங்கள் என பல விடயங்களை ஒட்டி எங்களுடைய கட்சியின் தலைவர் தலைமையில் பல சுற்றுக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தோம்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரையில் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியோ,கட்சியின் தலைவரின் கட்டளையை மீறியோ, நாங்கள் வாக்களிக்கவில்லை. இன்று முகநூல்கள் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைவரின் சொல்லை மீறி 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெட்கமில்லாமல் கட்சியை காட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்ற பெரும் புரளியை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

பொதுவாக எமது கட்சியினுடைய வரலாற்றினை நோக்கும் போது எப்பொழுதும் மக்களுடைய நலனுக்காகவே செயற்பட்டு இருக்கின்றது வெளி நபர்கள் கூறுவது போன்று சந்தர்ப்பவாத அரசியலாகவோ,அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு அரசியல் செய்பவர்களாகவோ,அல்லது பதவிக்கு ஆசைப்பட்டு அரசியல் செய்யும் ஒரு கூட்டமாகவோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருந்ததில்லை. என்னைப் பொறுத்தமட்டில் இதயசுத்தியுடன் இறைவன் மீது ஆணையாக நாங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற 20 இலட்சம் முஸ்லிம்களின் எதிர்காலத்தை பற்றி கவலையோடு இருக்கின்றோம். ஏனென்றால் முஸ்லிம்கள் இந்த நாட்டில் கிட்டத்தட்ட 10% மாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் எங்களுடைய பிரதான இலக்கு இந்த நாட்டினுடைய அரசாங்கத்தை அமைக்கக்கூடிய வல்லமை எமது சமூகத்திற்கு இல்லை இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.அதேநேரம் இந்த நாட்டில் ஆட்சியாளர்களாக வருகின்ற ஒரு சமூகம் சிங்களப் பெரும்பான்மை சமூகம் ஆகும்.எனவே சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினுடைய அரசியல் நிலைப்பாட்டோடு அதிலுள்ள விடயங்களை மிகத் தீவிரமாக தந்திரோபாய ரீதியில் பார்க்க வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது.

அதிலும் நாங்கள் வாதிடலாம் முஸ்லீம்களும் எங்களுடைய சகோதர இனமான தமிழர்களும் நினைத்தால் கூட ஆட்சியை பிடிக்கவும் முடியாது ஜனாதிபதியாகவோ,பிரதமராகவோ வரவே முடியாது.விரும்பியோ, விரும்பாமலோ இந்த நாட்டின் ஆட்சியை பெரும்பான்மை இனமான சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்கள் தான் ஆட்சியை அமைக்க முடியும்.அவ்வாறு ஒரு யதார்த்தமான சூழ்நிலை இருக்கின்ற போது குறிப்பாக கடந்த 2019 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் இந்த நாட்டில் 70% மான சிங்கள மக்கள் இப்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியவர்கள் அதே நேரம் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களில் 95% ஆனவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்து இருந்தார்கள்

இந்த சூழ் நிலை தெற்கில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் எங்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கின்றது.அதிலும் துரதிருஸ்டவசமாக 2019 ஏப்ரலில் நடைபெற்ற சஹ்ரானின் குண்டு வெடிப்பு சம்பவம் இன்னும் தெற்கில் உள்ள பெரும்பான்மை சமூகத்தில் ஒரு சந்தேகத்தையும்,எரிச்சலையும் உருவாக்கி இருக்கும் நிலையில் எங்களுடைய 20 இலட்சம் முஸ்லிம்களுடைய வாழ்வியல் என்பது கேள்விக்குறியான நிலையில் குறிப்பாக வட கிழக்குக்கு வெளியே உள்ள மக்கள் பீதியுடன் வாழ்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

அதிலும் நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற அரசுக்கு ஒட்டுமொத்த சமூகமும் எதிராக இருக்கின்ற போது இந்த விடயம் ஒரு பாரதூரமான விரிசலை சிங்கள-முஸ்லிம் சமூகத்திற்கு இடையில் ஏற்படுத்தக்கூடும். என்கின்ற பயம் தெற்கில் உள்ள இளைஞர்கள்,உலமாக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டித்தான் கடந்த பொதுத்தேர்தலில் வட கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகள் யார் என்று பாராமல் பொதுஜன பெரமுனக்கு வாக்களித்தனர்.

இந்த இக்கட்டான சூழ் நிலையில் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் சிங்கள-முஸ்லிம் மக்களுக்கான இந்த இடவெளியினை யார் போக்குவது என்ற விடயம் பெரியதொரு கேள்விக்குறியாக இருந்து வந்தது.

அதேநேரம் கிழக்கு மாகாணம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய முதுகெலும்பு என்பதோடு முஸ்லிம்களுடைய உள்ளூர் தேசிய அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாக வருவதற்கு சாத்தியப்பாடுகள் உள்ள ஒரு அரசியல் பிராந்தியமும் ஆகும்.அங்கு அரசியல் சமநிலையில் முதல் நிலையில் உள்ள முஸ்லிம் சமூகம் இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனால் பாரிய பின்விளைவுகள் அந்த மாகாணத்தில் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.எனவே இந்த கிழக்கு மாகாணத்தினுடைய அரசியல் சமநிலை என்பது ஒரு சமச்சீரற்ற நிலையில் இருப்பதனால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதனை நாங்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி இருந்தோம். அதில் மிக பிரதானமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக உள்ள கல்முனை நகரினை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.அந்த நகரின் இறைமை அதிகாரத்தினை பாதுகாக்க வேண்டியது பொறுப்பு தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. எனவே அந்த ஆட்சியாளர்களுடன் முட்டிமோதுகின்ற போதும், கடுமையான முறையில் உரசல்களை மேற்கொள்ளுகின்ற போதும் கல்முனையின் இறைமை என்பது கேள்விக்குறியாகும்.எனவே அதனை பாதுகாப்பது எங்கள் கடமையாகும். கல்முனையை இழந்துவிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதா?அல்லது ஜனநாயகத்துக்காக கல்முனையை இழப்பதா?என்ற பல விடயங்கள் தொக்கி நின்றது. அது கல்முனையில் மட்டும் அல்ல கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் என்று பல விடயங்கள் காணப்பட்டன.

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் எங்கள் கட்சியின் தலைமைக்கு நாங்கள் தெளிவாக சொன்னோம். இலங்கை வரலாற்றில் புதியதொரு அரசியல் கலாசார சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழ் தேசியத்தின் அரசியலில் புதிய தந்திரோபாய அரசியல் காய்நகர்த்தல்களை கடைப்பிடிக்கின்றார்கள்.கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியம் என்ற ரீதியில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசுக்கு கிட்டத்தட்ட 150000 வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள். அதனால்தான் வியாலேந்திரன்,பிள்ளையான் கருணா போன்றவர்கள் அரசின் முக்கிய சக்திகளாக மாறியுள்ளார்கள்.

எனவே இந்த விடயத்தில் சில விமர்சகர்களுக்கு பயந்து மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் தயக்கம் காட்ட முடியாது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் என்பது சமூகத்தின் முதன் நிலை(community first) என்ற நிலையில் செயற்பட வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.இதனை உதரித்தள்ளிவிட்டு நாங்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது. நாங்கள் இலகுவாக மக்களிடம் காரணம் காட்டி தப்பிக்க முடியும். நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் எங்களால் கல்முனையை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது ,திருகோணமலை முஸ்லிம்களின் பிரச்சினையை தீர்க்க முடியாமல் போய்விட்டது என்று நாங்கள் சொல்ல முடியும் ஆனால் அது எங்களுடைய தலைமைத்துவத்திற்கும், மனச்சாட்சிக்கும்,எங்களுடைய பொறுப்புக்கூறலுக்கும்,மக்கள் ஆணைக்கும் செய்கின்ற துரோகம் என்றே நான் கூறுவேன்.

இவ்வாறான நியாயபூர்வமான காரணங்களை எங்கள் தலைமைக்கு எடுத்துக்கூறிய போது கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக உங்கள் மனச்சாட்சிப்படி நீங்கள் ஆதரவாகவும் வாக்களிக்கலாம், எதிராகவும் வாக்களிக்கலாம். கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அந்த உரிமையை தருகின்றேன் இதில் ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு கட்சியினதோ,தலைவரினதோ கட்டுப்பாட்டை மீறியதாக கருதப்படமாட்டாது.என்ற தலைமையின் ஆசிர்வாதம் பெற்ற பின்னரே நாங்கள் 20வது சீர்திருத்தத்திற்கு வாக்காளித்தோம்.என குறிப்பிட்டார்.தலைவரின் சம்மதம், கட்சியின் ஆசிர்வாதத்துடனே 20 ஆவது சட்டத்தை ஆதரித்தோம் -

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK