இலங்கையில் மீண்டும் தூக்குத் தண்டனை அமுலுக்கு வருமா..? போதைப்பொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Sunday, July 12, 2020

இலங்கையில் மீண்டும் தூக்குத் தண்டனை அமுலுக்கு வருமா..? போதைப்பொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பு

மிகப் பெரிய போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குற்றவாளிகள் என உறுதியானால், அவர்கள் அனைவரையும் தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு பொலிஸ் கோரிக்கை விடுக்கும் என பிரதிப் பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அண்மை காலத்தில் தூக்கு தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும் இப்படியான பொலிஸ் அதிகாரிகளை சமூகத்தில் இருந்து ஒழிக்க இந்த கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணைகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, மேன்முறையீட்டிலும் அந்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களை தூக்கிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், மூன்று உப பொலிஸ் பரிசோதகர்கள், 5 பொலிஸ் சார்ஜன்டுகள், 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் வெளியார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 114வது சரத்திற்கு அமைய அரச குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க முடியும். முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் கொலை குற்றவாளிக்கு 1976 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதன் பின்னர் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதாக கூறினாலும் அந்த தீர்மானத்தை செயற்படுத்தவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என கூறியிருந்தமை இதற்கான அண்மைய உதாரணமாகும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் மரண தண்டனை தொடர்பாக வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.

தற்போது போதைப்பொருள் விற்பனையுடன் பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மீண்டும் தூக்குத் தண்டனை பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினாலும் ஜனாதிபதி நிர்ணயிக்கும் திகதியிலேயே அது நிறைவேற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment