ராஜபக்ஷவினருக்கு 50 சதவீத ஆசனங்களை பெறுவதற்கு கூட ஆணை வழங்காதீர்கள்: கலாநிதி.ஜயம்பதி - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

ராஜபக்ஷவினருக்கு 50 சதவீத ஆசனங்களை பெறுவதற்கு கூட ஆணை வழங்காதீர்கள்: கலாநிதி.ஜயம்பதி

(ஆர்.ராம்)

நாட்டில் குடும்பத்தை மையப்படுத்திய சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தவதற்கே ராஜபக்ஷவினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்கள் ஆணையைக் கோருகின்றார்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விக்கிரமரட்டன தெரிவித்தார். 

ஆகவே சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டின் மூவினக் மக்கள் குழுமமும் ஒன்றிணைந்து ஐம்பது சதவீத ஆசனங்களைப் பெறுவற்கு கூட ஆணை வழங்க கூடாது என்றும் அவர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். 

வலுவான ஆட்சியொன்றை அமைப்பதற்காகவும், குழப்பங்கள் நிறைந்த 13,19ஆம் திருத்தச்சட்டங்களை மறுசீரமைத்து அனைவருக்கும் பங்கமில்லாத புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலத்தினை வழங்குமாறு ஆளும் தரப்பில் தொடர்ச்சியாக கோரப்படுகின்றமை குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசியலமைப்பில் குறைபாடுகள் இருந்தாலும் அதில் உள்ள மிக முக்கியமான இரண்டு விடயங்களாக இருப்பது 13ஆவது திருத்தச்சட்டமும், 19ஆவது திருத்தச்சட்டமுமாகும். 

13ஆவது திருத்தச்சட்டத்தினை பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அது அமையாது விட்டாலும் அதனை அடிப்படையாகவும் முதன்மையானதாகவும் வைத்து இனப்பிரச்சினை தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு பற்றிய கலந்துரையாடலை ஆரம்பிக்க வல்லதாக இருக்கின்றது. 

19ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டதொன்றாகும். இந்த நாட்டில் ஏறக்குறைய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். பாராளுமன்றில் இந்த திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது ஒரு உறுப்பினரைத் தவிர ஏனைய அனைவரும் ஆதரவளித்திருந்தார்கள். 

இச்சட்டத்தின் மூலமாக நாட்டில் சர்வாதிகார ஆட்சிமுறைக்கு வித்திடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டு விட்டன. சுயாதீன ஆணைக்குழுக்கள், தகவலறியும் உரிமைச்சட்டம் உள்ளிட்டவையெல்லாம் கட்டமைக்கப்பட்டன. இவை ஜனநாயகத்தின் அங்கலட்சணங்களாக இருக்கின்றன. 

ஆனால் தற்போது, இந்த கட்டமைப்புக்களை தவறானதாக சித்தரித்து மக்கள் மத்தியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதிகாரத்தினை தனியொருவரை நோக்கி குவித்து குடும்பத்தினை மையப்படுத்திய சர்வதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்காகவே முனைப்புடனான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. 

இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும். இத்தகைய பாரதூரமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை ராஜபக்ஷவினர் கோருகின்றார்கள். 

அவ்வாறு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசியமைப்பில் சொற்பமாக இருக்கும் 13, 19ஆம் திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்கப்பட்டு ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கப்படும். 

நாட்டில் வலுவான ஆட்சி அமைவதே எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஏதுவான நிலைமைகளை உருவாக்கு என்று பிரசாரங்கள் செய்யப்பட்டாலும் அவ்வாறான தொரு நிலைமை ஏற்படுகின்றபோது கடந்த ஏழுமாதங்களில் காணப்பட்டுவரும் படையினரை மையப்படுத்தி ஆட்சிமுறையே மேலும் உக்கிரமடையும். 

ஆகவே, தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி பெரும்பான்மை சிங்கள மக்களும் எதிர்கால விளைவுகளையும், ஆபத்துக்களையும் கவனத்தில் கொள்வதோடு ராஜபக்ஷவிருக்கு பாராளுமன்றில் ஐம்பது சதவீத ஆசனங்கள் கிடைப்பதற்கான ஆணையைக் கூட வழங்க கூடாது என்றார். 

No comments:

Post a Comment