“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும்” – பாலமுனையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

மாவட்டத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாத்திரமின்றி, தேசிய ரீதியில் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சவால்களை முறியடிப்பதற்கும் மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை துணைபுரியுமென அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அம்பாறை, பாலமுனையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி கபூரை ஆதரித்து, மாவட்டக் குழுவின் தலைவர் சட்டத்தரணி அன்சிலின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“வரலாற்றில் இத்தனைகாலம் நமது சமூகம் எதிர்கொண்டிராத ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் இப்போது சந்திக்கின்றது. சொந்தக்காலில் உழைத்து வாழ்ந்துவரும் சமூகத்துக்கு இத்தனை துன்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மற்றைய இனத்தை நாம் மதித்து வாழ்ந்தவர்கள். சக இனத்தவருடன் சகோதர வாஞ்சையுடன் பிணைந்து வாழ்ந்தவர்கள். நாட்டின் விடுதலைக்காக, சுதந்திரத்துக்காக பெரும்பான்மையினத்தவருடன் நமது முன்னோர்கள் சேர்ந்து போராடிய வரலாறுகள் எல்லாம் இப்போது மறக்கடிக்கப்பட்டுள்ளன. நாடு பிளவுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததினால், பல உயிர்களை நாம் காவுகொடுத்தோம். வடக்கிலிருந்து ஒரே இரவில் அடித்து விரட்டப்பட்டு அகதியானோம்.
அண்மைக்காலமாக நாம் மிக மோசமாக சீண்டப்படுகின்றோம். படுமோசமான சமூகமாக சித்தரிக்கப்படுகின்றோம். சஹ்ரான் என்ற கயவனின் அக்கிரமத்தை வெறுத்து, அவன் சார்ந்த கூட்டத்தை காட்டிக்கொடுத்து, அடியோடு அழிக்க உதவிய எமக்கெதிராக, இத்தனை எறிகணைகள் ஏன் வீசப்படுகின்றன? எம்மை எதற்காக வேட்டையாடத் துடிக்கின்றார்கள்? சமூகத்தையும், சமூகத்தின் தலைமைகளையும் இல்லாதொழிப்பதற்காக சதிகள் பின்னப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கதைகளை கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

நானோ, என் சகோதரர்களோ எமது வாழ்நாளில் சஹ்ரானை சந்தித்ததுமில்லை. கண்ணால் கண்டதுமில்லை. இருந்த போதும், எங்களை மையமாக வைத்து கதைகள் சோடிக்கின்றார்கள். தடுப்புக்காவலிலுள்ள என் சகோதரர், தன்மீதான குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ளார். என்னிடம் அவர் உறுதிபட இதனைத் தெரிவித்தார். தற்போது, புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது, எனது மற்றைய சகோதரர் தொடர்பில் இன்னுமொரு புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார். இட்டுக்கட்டப்பட்ட பொய்களை நம்பும்படி சோடித்து, பின்னர் சிங்கள அச்சு ஊடகங்களில் கொட்டைஎழுத்துக்களில் பிரசுரித்தும், இலத்திரனியல் ஊடகங்களில் முதன்மைச் செய்திகளாகவும் ஒலி, ஒளிபரப்புகின்றார்கள். அந்த விவகாரத்தை மேலும் விமர்சித்து, வியாக்கியானம் கூறுகிறார்கள்.
எப்படியாவது எமது நிம்மதியை தொலைத்துவிட வேண்டுமென்பதும், எமது செயற்பாடுகளை முடக்க வேண்டுமென்பதுவுமே இவர்களின் திட்டம். என்னதான் இவர்கள் குத்துக்கரணம் போட்டாலும், நாம் இறைவனைத் தவிர எவருக்கும் தலைவணங்கமாட்டோம். நேர்மையான, நிதானமான எமது அரசியல் பயணத்தை உயிருள்ளவரை தொடருவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.       


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK