அநுரவின் வெற்றி வாய்ப்பும் தமிழரின் பங்களிப்பும்



- கண்ணமுத்து சிதம்பரநாதன்-

கடந்த ஜனாதிபதி தோ்தலில் கோட்டா வெற்றி பெறுவார் என்பது, தோ்தலுக்கு முன்பே அன்றைய கால கட்டத்தில் உறுதியாக நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். அந்த வெற்றிக்காக, இலங்கையிலும், புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்த இலங்கையர் பெரும்பான்மையாக சிங்கள இனத்தவர்கள் கடினமாக செயற்பட்டனர். கோட்டாவோ அல்லது அவரது சார்பில் மொட்டுக்கட்சியினரோ, புலம்பெயர் தேசங்களில் மக்களை சந்தித்து கூட்டங்களையோ, பிரச்சாரங்களையோ செய்யவில்லை. ஆனால் தோ்தல் இடம்பெற்ற அந்த வாரத்தில் கூட்டம், கூட்டமாக வாக்களிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கினர். இவர்களை அவ்வப்போது பல ஊடகங்கள் படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தன. அத்தருணத்தில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த ஒருவர். சிங்கள மக்களால் மாத்திரம் இந்த நாட்டின் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாது என்று வடக்கில் கூறுகிறார்கள். இந்த தோ்தலில் அவர்களின் வாக்குகள் இன்றியே சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்று கோட்டா ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காகவே தாங்கள் வாக்களிக்க வருகிறோம் என்று கூறினார். இவ்வாறாக இவர்கள் கூறியதற்கு காரணம் இருந்தது. தமிழ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் ஊடகம் ஒன்றுக்கு கமராமுன் நின்று நிருபரின் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்போது, இந்த ஜனாதிபதி தோ்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கும் போது, யாரை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்று வாக்களிப்பதைவிட யாரை தோற்கடிக்க வேண்டும் என்றே வாக்களிப்பார்கள் என்று கூறினார். அவரின் கூற்று யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று தீர்மானிப்பது தமிழ் மக்கள் வாக்குகள் தான் என்ற தோரணையில் பேசினார். இறுதியில் தென்னிலங்கை ஒட்டுமொத்த இலங்கை சிறுபான்மை மக்களின் வாக்கு இன்றியே கோட்டாவை ஜனாதிபதியாக தெரிவு செய்து வரலாறு படைத்தார்கள். இது நடந்து முடிந்த சமாச்சாரம்.

கண்டி பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றும் எனது நண்பர் ஒருவர் அரசியல் ஆய்விலும் அது தொடர்பான புள்ளியலிலும் மிகவும் புலமைபெற்றவர். கடந்த ஜனாதிபதி தோ்தலில் கோட்டா 65 இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் 51 சத வீதத்திற்கு மேல் பெற்று வெற்றியடைவார் என கூறியிருந்தார். அந்த தோ்தலில் 133 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 83 சதவீதத்திற்கு அதிகமானனோர் வாக்களித்திருந்தனர். எதிர்வரும் தோ்தலில் 170 இலட்சம் போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 80 சத வீதமானவர்கள் வாக்களித்தால் அது 140 இலட்சம் வாக்குகளாக இருக்கும். இன்றைய தோ்தல் கள பல்வேறு காரணிகளை பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது, அநுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக கூறுகிறார். அதன்படி, அநுர 69-70 இலட்சம். 50-51 சத வீத வாக்குகளையும் சஜித் 59-60 இலட்சம் 42-43 சதவீதமான வாக்குகளையும் மற்றைய வேட்பாளர்கள் 10-15 இலட்சத்திற்கும் அதாவது 9-10 சத வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறுவார்கள் எனவும் அவருடைய கணிப்பில் கூறியிருக்கின்றார். இலங்கை தோ்தல்களில் வெற்றிகளை தீர்மானிப்பது 60 சதவீத கிராமப் புற மக்கள் என்றும் அவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் எதிர்வரும் தோ்தலில் அநுரவுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவருடைய கணிப்பு. ஜனாதிபதி தோ்தல் பற்றிய கருத்து கணிப்புகள் பற்றி அவர் கூறும்போது, பலவகையான கருத்துக் கணிப்புக்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அவை யாவும் சமூகவலைத்தளங்கள் மூலம் கருத்து சோ்க்கும் கணிப்புக்களாக இருக்கின்றன. இந்த கருத்து கணிப்பு 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களை எப்போதும் சென்றடைவது இல்லை. இலங்கையிலிருந்து வெளிவரும் எந்த ஊடகங்களும் உண்மையான கள நிலைவரத்தை வெளிக்கொண்டு வருவதாக இல்லை. ஒவ்வொரு ஊடகத்திற்கும் தனி நிகழ்ச்சி நிரல் உண்டு. பேராதனை பல்கலைக்கழகத்தில் தன்னிடம் கல்வி பயின்ற மாணவர்கள் இலங்கையின் எல்லாப் பக்கத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பும் தகவல்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தனது கணிப்புக்களை தருவதாக கூறுகிறார்.

கடந்த ஜனாதிபதி தோ்தலில் வடகிழக்கு மாகாண மக்கள் முக்கியமாக வட மாகாண மக்கள் வாக்களித்தது போல் எதிர்வரும் தோ்தலிலும் வாக்களிப்பார்களாக இருந்தால் அது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் அநுரவுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. வெளிநாடொன்றில், அநுரவின் மக்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அநுர, சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் என்பதை தான் விரும்பவில்லை எனவும், அவர்களின் வாக்குகளினாலும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக பொறுப்பெடுத்து நாட்டை முன்னேற்ற முடியாது எனவும், இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும், சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் அனைவரும் சோ்ந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்து, இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றும் புதிய யுகத்தில் பங்குகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

தோ்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கூடும் மக்களின் எண்ணிக்கையை வைத்து தோ்தல் பெறுபேறுகளை ஓரளவு தீர்மானிக்க முடிகிறது. சில கட்சிகள் மேடைகளை அலங்கரிக்கும் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த மக்களை கூட்டுகிறார்கள். சில மக்களின் எண்ணிக்கை மக்களின் தீர்மானங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும் ஊடகங்களிலும் காட்சிப்படுத்தி மக்களின் அபிப்பிராயத்தை மாற்றவும் முடியும். கடந்த காலங்களில் ஜே.வி.பி. கட்சி தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் கூடும் மக்களின் எண்ணிக்கை வாக்குகளாக மாறுவதில்லை என்ற பொதுவான கருத்து எதிர்வரும் தோ்தலில் பொய்யாக்கப்படும் என கூறப்படுகின்றது. பல மணித்தியாலங்கள் காத்திருந்து அநுரவின் நீண்ட நேர உரையை அமர்ந்திருந்து ஆரவாரம் செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம், வலிந்து சோ்க்கப்பட்ட கூட்டம் இல்லை. அவர்கள் தானாக சோ்ந்த கூட்டம். அண்மையில், அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் இன மக்களும், அதேபோன்று கண்டி மாவட்டத்தில் கலந்து கொண்ட மலையக தமிழ் மக்களின் கூட்டமும், அநுரவின் ‘சிஸ்டம் சேஞ்சு’ பயணத்தில் பங்கு கொள்ள காத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது. வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்த ‘சிஸ்டம்’ மாற்றத்தில் பங்கு கொள்ளத் தயாராக இல்லையா? அல்லது அந்த மாவட்டத்தில் அரசியல்வாதிகளின் வழமையான ‘தமிழ் தேசிய வாத’ கோஷ அரசியல் பொறிக்குள் அகப்பட போகின்றார்களா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அவர்கள் முன் இருக்கிறது.

கடந்த ஜனாதிபதி தோ்தலில் கோட்டாவை தோற்கடிக்க வேண்டும் என்ற தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் பிரச்சாரத்திற்குள் மக்கள் அகப்பட்டுக் கோண்டு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தார்கள். அங்கு மக்கள் வாக்களித்த முறைமையை புள்ளி விபரப்படி அவதானித்தால், யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 5 இலட்சத்து 64 ஆயிரம் ஆக இருந்தது. ஆனால் வாக்களித்தவர்கள் 3 இலட்சத்து 84 ஆயிரம் போ். இது 68 சதவீதமாகும். இதில் சஜித்துக்கு கிடைத்த வாக்குகள் 3 இலட்சத்து 12 ஆயிரம் வாக்குகளாகும். அது 83 சதவீதமாகும். இதேபோன்று வன்னி மாவட்டத்தில், சஜித் ஒரு இலட்சத்து 74 ஆயிரம் வாக்குகள் அது 82 சதவீதமாகும். அண்மையில் ஜனாதிபதி தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, வடகிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு ஒன்றில், தனி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்குவதற்கு தங்கள் கட்சி ஆதரவு இல்லை என கூறியதிலிருந்து இந்த கட்சி ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் ஆகிய ஒருவருக்கே ஆதரவு அளிப்பார்கள் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. எதிர்வரும் தோ்தலும் சஜித் அல்லது ரணில் ஆகிய இருவருக்கும் மக்கள் வாக்களிக்கக்கூடிய நிலை இருந்தாலும் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால், அந்த வாக்குகள் அவருக்கு கணிசமாக வாக்களிக்கப்படுமே தவிர, அநுரவுக்கு எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. கடந்த பொது தோ்தலில் வடமாகாணத்தில் மக்கள் வாக்களித்த முறைமையை நோக்கும்போது தமிழ் பொது வேட்பாளர் என்ற கோஷம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது.

யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியவாதிகள் கூட்டணியாக போட்டியிட்ட தமிழ் தேசியவாதிகள் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி) ஒரு லட்சத்து 12 ஆயிரம் வாக்குகளையும், விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி 35 ஆயிரம் வாக்குகளையும் பெற்றிருந்தன. யாழ். மாவட்டத்தில் மொத்தமாக செலுத்தப்பட்ட வாக்குகள் 3 இலட்சத்து 94 ஆயிரம் இதில் 2 இலட்சத்து 46 ஆயிரம் வாக்குகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக கிடைத்தன. தற்போதைய அரசியல் பரப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி ஜனாதிபதி தோ்தலை பகிஷ்கரிக்கச் சொல்கிறது. பாராளுமன்ற கதிரைகளை பிடித்துக் கொள்வதற்காக பொதுத்தோ்தலில் ‘சுய ஆட்சி’ என்ற கோஷத்தை மக்கள் முன்வைத்து, மக்களிடம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று, அங்கு “ஒற்றை ஆட்சிக்கு கீழ் விசுவாசமாக இருப்பேன்” என்று சத்தியப் பிரமாணம் செய்து, எம்.பி.க்களுக்குரிய வசதிகள், சலுகைகள், வரப்பிரசாதங்களை சிங்கள அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இந்த கட்சியினர், பாராளுமன்ற தோ்தலை பகிஷ்கரிக்கக்கூறும் இவர்களது ‘இரட்டை வேட’ அரசியலை மக்கள் புரிந்து கொள்ளவது அவசியம். அங்கஜன் இராமநாதனின் கட்சி ஆதரவாளர்களும், தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதில்லை. தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளிப்பதாக ஏற்கனவே டக்ளஸ் தேவானந்தா அறிவித்தும் விட்டார். வன்னி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த பொது தோ்தலில் வாக்களித்த மொத்தம் 2 இலட்சத்து 24 ஆயிரம் வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் வெறும் 59 ஆயிரம் வாக்குகள் மாத்திரம். ஆகமொத்தம் இந்த பின்புலத்தில் வடமாகாண தமிழ் மக்களின் 38 சதவீதமான வாக்குகளை மட்டும் நம்பி சர்வதேசத்துக்கு தமிழர் தாயக மக்களின் கோரிக்கையை உலகறிய தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டுமென்பது ‘ஆண்டிகள் சோ்ந்து மடம் கட்டியது’ போலாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பொது வேட்பாளர் பிரச்சாரம் எடுபடாது என்பதற்கு அங்குள்ள தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களும், புத்திஜீவிகளும், சிவில் அமைப்புக்களும் தெரிவித்து வரும் கருத்துக்கள் ஆதாரமாக அமைந்துள்ளன தெரிய வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தனி தமிழ் தொகுதியான பட்டிருப்பில் கடந்த பொதுத் தோ்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த மொத்த வாக்குகள் 26 ஆயிரம் மட்டுமே. அதற்கு எதிராக கிடைத்த வாக்குகள் 42 ஆயிரம் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை (திகாமடுல்ல) ஆகியவற்றின் மொத்தம் 10 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது ஒரு இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே. இந்த புள்ளி விபரத்தின்படி யாழ்ப்பாண தமிழ் தேசிய பேசும் அரசியல் வாதிகளின் ஜனாதிபதி தோ்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்பது எமது பேச்சு தமிழில் அது ஒரு ‘பம்மாத்து’ என்பதைவிட வேறு வியாக்கியானம் தேவையில்லை.


வடகிழக்கு மாகாணங்களில் கடந்த கால தோ்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள முறை வழியை சீர்தூக்கி, பகுப்பாய்வு செய்து, தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் நிறுத்தி பெரும்பான்மை தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் இருக்கின்ற சாதக, பாதகங்களை கருத்தில் கொள்ளாது. சிலர் சோ்ந்து புதிய ‘தமிழ் மக்கள் பொது சபை’ என்ற இன்னுமொரு திருவிழா கடையை திறந்து வியாபாரம் செய்த திருவிழா முடிய கடையை மூடி விடுவதனால் எதுவும் நடக்கப்போவதில்லை. இது போன்ற திருவிழா திடீர் கடைகள் தமிழர் பரப்பில் பல முறை தோன்றியதுண்டு. வடகிழக்கு மக்கள் இந்த திடீர் கடைகளை புறக்கணிப்பதுடன். ஒரு பத்தி ஆசிரியர் குறிப்பிட்டது போல தமிழ் பொது வேட்பாளரை “பட்டு வேட்டி கனவில் நம்பி கோவணத்தையும் இழந்தவர்களாக” வடகிழக்கு தமிழர்கள் ஆகிவிடக்கூடாது. 

இலங்கை அரசியலில் கட்சிகளும், அரசியல்வாதிகளும், தாங்கள் அனுபவித்து வந்த ஊழல் மோசடி, கொள்ளை நிரம்பிய அரசியல் பாரம்பரியத்திலிருந்து விலகிக்கொள்ள தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களாக தொடர்ந்தும் அதனை தக்க வைத்துக்கொள்ள புதிய கட்சிகளாகவும் புதிய அணிகளாகவும், கட்சி தாவல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதானது அரசியல் பரப்பில் தினசரி காணுகின்ற காட்சிகளாகும். இது தமிழ் அரசியல் வாதிகளுக்கும் விதி விலக்கில்லை. தமிழ் தேசியம் பேசும் எம்.பி.க்களுக்கு, நாட்டின் பொருளாதார நெருக்கடியில், அவர்களுக்கு வாக்களித்த மக்கள் முகம் கொடுக்கும் அவலத்தைக்கண்டு கொள்ளப்போவதில்லை. கொழும்பிலும் வடகிழக்கு மாகாண நகரங்களில் வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கு, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை செலவு பற்றி கரிசனைப்பட வேண்டிய தேவையில்லை. தோ்தல் காலங்களில் ஈழ ராச்சியம் என்றும், சுய நிர்ணய உரிமை என்றும், சமஷ்டி என்றும், 13 பிளஸ் என்றும் மக்களுக்கு உணர்ச்சிகளை தூண்டும் போலி அரசியல் பேசுவோர் மக்களை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருக்கவே முனைவார்கள். மாற்றத்தை விரும்பும் மக்கள் தமிழர், சிங்களவர் என்ற பேதம் இன்றி ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும். இலங்கை பெரும்பான்மையான வாக்காளர்கள் ‘சிஸ்டம்’ மாற்றத்திற்கான தோ்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலை எதிர்கொள்ளத் தயாராகிறார்கள். கடந்த 70 வருடத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் ‘பாரம்பரிய பரம்பரை’ அரசியல் கலாசாரத்தை மாற்றும் யுகத்தில் அநுரவின் தலைமையில் முன்னோக்கிய பயணத்தில் இணைய தீர்மானித்து விட்டார்கள். இந்த மாற்றத்தின் பங்காளிகளாக தமிழர்களும் அணி சேரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்