(நா.தனுஜா)
'அரகலய' போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் வகிபாகமே மேலோங்கியிருந்ததாகக் கூறுவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் உறங்கிக்கொண்டிருக்கும் இனவாதத்தைத் தூண்டி, மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முற்படுவதாகக் குற்றஞ்சாட்சியிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அப்போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்திய தலைவர்களில் குறிப்பிட்டுக்கூறத்தக்க அளவில் தமிழர்கள் எவரும் இருக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட 'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும் நூல் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டது.
அந்நூலில் அரகல போராட்டத்தின் பின்னணி, போராட்டக்காரர்களின் எழுச்சியை அடுத்து தான் நாட்டை விட்டு வெளியேறிய விதம், அவ்விவகாரத்தில் நிலவிய வெளிநாட்டுத் தலையீடுகள் போன்ற பல்வேறு விடயங்களையும் கோட்டாபய ராஜபக்ஷ அவரது பார்வையின் அடிப்படையில் உள்ளடக்கியிருக்கிறார்.
குறிப்பாக 'அரகலய போராட்டத்துக்கு வருகை தந்தவர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால், அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னை எதிர்த்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அப்போராட்டத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம் பெருமளவுக்கு இருந்தது. ஏனெனில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்களும், பொதுபலசேனாவின் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம்களும் என்னை விரோதியாகவே பார்த்தார்கள்.
எனவே, நான் பதவியில் தொடர்ந்தால் சிங்கள பௌத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருக்கக்கூடும்' என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பௌத்த இனவாதத்தின் மூலம் ஆட்சிபீடம் ஏறிய இனவெறி மிகுந்த ஒருவராவார்.
யுத்தவெற்றியை பெரும் சாகசமாகக் காண்பித்து, அதனை மக்களுக்கு அடிக்கடி நினைவூட்டியது போன்று, இப்போதும் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் உறங்கிக்கொண்டிருக்கும் இனவாதத்தை தட்டியெழுப்பி, ஆட்சிக்கு வருவதே அவரது நோக்கமாக இருக்கின்றது.
தமிழ் மக்களை சுதந்திரமாக செயற்பட விடாமல் தடுப்பதும், அதற்கு எதிராக அவர்கள் கேள்வி எழுப்பும்போது அதனை சிங்களவர்கள் மத்தியில் இனவாதமாகக் காண்பிப்பதும் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இது தமிழர்களின் நிலைத்திருப்பு சார்ந்த விடயம் என்பதால், சில தருணங்களில் நாம் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது' என்று தெரிவித்தார்.
அதேபோன்று கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தனது சகோதரனுடன் (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) இணைந்து யுத்தத்தில் நேரடியாக பங்கெடுத்த கோட்டாபய ராஜபக்ஷ இனப்படுகொலையிலும், மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல்களிலும் ஈடுபட்டமையினால் அவர் மீது தமிழ் மக்களுக்கு கோபம் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், இருப்பினும் அதன் பின்னர், அவர் சிங்கள மக்கள் மத்தியில் புத்திசாலித்தனம் மிகுந்த வீரனாக சித்தரிக்கப்பட்டதாகவும், அதனை நம்பி வாக்களித்த சிங்கள மக்கள் பின்னாளில் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
'கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் மதிநுட்பமுடைய வீரனாக சித்திரிக்கப்பட்டாலும், உண்மையில் அவர் முரட்டுத்தனம் நிரம்பிய முட்டாளாவார். ஆனால், அவரால் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சிங்களவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதியமையால், அதனை அவர்கள் எதிர்க்கவில்லை. அதுமாத்திரமன்றி அவரை நம்பி தேர்தலில் வாக்களித்தனர். இருப்பினும், அவரது நடவடிக்கைகள் தமது சமூகத்துக்கு எதிராகத் திரும்பியபோதுதான் சிங்களவர்கள் கிளர்ந்தெழுந்து, 'அரகலய' போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி இறக்கினர்.
அவ்வாறிருக்கையில், தற்போது அவர் 'விழுந்தவன் மீசையில் மண் ஒட்டாதது போல' தமிழர்களும், முஸ்லிம்களுமே அரகலய போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறுகிறார். மீண்டும் இனவாதத்தைத் தூண்டி ஆட்சிக்கு வரமுடியும் என்று கனவு காண்கிறார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கி, பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றியிருந்தால் நாம் இப்போது சிங்கப்பூர் போன்று மாறியிருப்போம். ஆனால், அவர் அதனைச் செய்யாததன் காரணமாகவே அவரது சொந்த மக்களால் துரத்தியடிக்கப்பட்டார்' எனவும் கஜேந்திரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK