“அலி சப்ரி ரஹீம் எம்.பியை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக அழுத்தம் விடுத்தவரே மு.கா உறுப்பினர் நியாஸ்” - கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆஷிக்!

 

“அலி சப்ரி ரஹீம் எம்.பியை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக அழுத்தம் விடுத்தவரே மு.கா உறுப்பினர் நியாஸ்” - கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆஷிக்!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அழுத்தம் விடுத்தவரே மு.கா உறுப்பினர் நியாஸ், அப்போது அவரின் புத்தளம் என்ற உணர்வு எங்கிருந்தது? என்று கல்பிட்டி பிரதேச சபையின்  முன்னாள் உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஆஷிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினருமான நியாஸ் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதமொன்றினை எழுத எண்ணியிருந்தேன். எனினும், அவர் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பகிரங்கமாக விளக்கமளிப்பதுதான் பொருத்தமாகும் என்பதற்கமையவே இந்தப் பதிவினை இடுகின்றேன்.

கடந்த இரு தினங்ளுக்கு முன்னர் மு.கா முக்கியஸ்தர் நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள், புத்தளம் மக்களாகிய எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என்பதை முதலில் கூற விரும்புகின்றேன்.

சகோதரர் நியாஸ் அவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தாலும்,  கட்சியினாலும் செய்யப்பட்ட அநியாயங்களின் போது, கட்சி பேதங்களுக்கு அப்பால் அவருக்கு உதவியது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்,  தனது ஆதரவாளர்களும் மாத்திரமே என்பதை அவர் மறந்து பேசியுள்ளதானது கவலை தருகின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் தேசிய
கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு பொதுவாக சகலரும் வாக்களித்தனர். அதில் நியாஸ், தாஹிர், சப்ரி, யஹ்யா, மர்ஹூம் பாயிஸ் என்று பாராது தங்களது விருப்பத்தின் பெயரில் வாக்குகள் அளிக்கப்பட்டன.

இறைவனின் நியதிப்படி அலி சப்ரி ரஹீம் அவர்கள் வெற்றி பெற்றார்.அவரது ஆரம்ப செயற்பாடுகள் கட்சியினைச் சார்ந்ததாக இருந்தாலும் பின்னர், அவரது இலக்கு, எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வேறு திசையில் இருந்தது. எனவே, அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், அதற்கான தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அழுத்தம் விடுத்தவர்களில் சகோதரர் நியாசஸும் ஒருவராவார். அப்போது புத்தளம் உணர்வு எங்கிருந்தது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இந்த நிலையில் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களின் முழுமையான பங்களிப்புடனும் புத்தளம் பெரிய பள்ளிவாசல், ஜம்இய்யத்துல் உலமா மற்றும் புத்திஜீவிகள், சமூக நல இயக்கங்களும் ஒன்றுபட்டு கலந்தாலோசித்து, இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொது அணியின் தேவைப்பாடு உணரப்பட்டது. இந்த பொது அணியின் தேவை தொடர்பிலும், புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பற்றி பேசினாலும், பூணைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி எழுந்த போது, முழு தியாகத்தினை செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை இப்பணியில் ஈடுபடுத்தியது.

இந்த  பணியினை முன்னெடுத்துச் செல்ல முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சகோதரர் யஹ்யா ஆப்தீன் அவர்களின்  தலைமையில் குறிப்பாக, எமது கட்சித் தலைவரினால் பெயர் குறிப்பிடப்பட்ட அணியினர், பல தடவை பலரது  வீடுகளுக்கு சென்று பொது அணிக்கான அழைப்பினை விடுத்தனர். இதற்கு சான்றாக எமது தலைவரின் இணைப்பு செயலாளராக இருந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா அவர்களை இதன் போது குறிப்பிட விரும்புகின்றேன். இதனது பலனாக  தேர்தல் வேட்பாளர்கள் பெயரிடப்பட்டனர்.

அந்தவகையில், தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பில், எமது கட்சியின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு இவ்விடயத்தில் தலையிட வேண்டாம் என்று சகோதரர் நியாஸ் அவர்கள் கூறுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? அதுமட்டுமல்லாமல், தற்போது முஸ்லிம் தேசிய  கூட்டமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்கள் தொடர்பிலும் நீங்கள் உரிய அறிவை பெற்றுக்கொள்ளவில்லையா? எனவும் கேட்க விரும்புகின்றேன்.

கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது தொடக்கம் இன்று வரை அலி சப்ரி றஹீமுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பில் யாவரும் நன்கறிவார்கள்.

முன்னாள் அமைச்சரும், எமது கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில், தான் சிறைவாசம் இருந்த போதும் தனக்கு கடந்த மொட்டு அரசாங்கத்தின் எவ்வித உதவியும் தேவையில்லை. சத்தியம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், எமது தலைவர் அனுபவித்த துன்பியல் வாழ்வினை ஒரு போதும் மறந்து  பேச முடியாது.

இப்படிப்பட்ட கால கட்டத்திலும் கட்சியின் தவிசாளரான அமீர் அலி அவர்களை தற்காலிக தலைவராகக்கொண்டு, கட்சியின் அதி உயர்பீட உறுப்பினர்களினால் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி, இஷாக் றஹ்மான், முஸாரப் போன்றவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு, பல கடிதங்கள் அனுப்பப்பட்டதை நியாஸ் அறிந்திருப்பார். இருந்தும் நித்திரையிலிருந்து திடீரென விழித்தெழுந்தது போன்று, எமது தலைவரை நோக்கி சகோதரர் நியாஸ் அவர்களே கேள்வி எழுப்புவது வேடிக்கையான விடயம்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு முன்னர், அவ்வாறு முடிச்சு இட்டால் என்ன நடக்கும் என்பதைக் கூட கண்டறிய முடியாத நிலையில், சகோதரர் நியாஸ் ஊடக சந்திப்பில் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்திருப்பதானது, அவரது திடீர் அரசியல் மாற்றத்தின் பின்னணியில்  சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் எத்தனையோ முரண்பாடுகள் காணப்படுகின்றன. அது தொடர்பில், தனிப்பட்ட ரீதியில்  எமது தலைவர் அவர்கள் பேசியிருந்தால் சகோதரர் நியாஸ் அவர்கள் முனாபிக்தனத்தினை பற்றி கதைத்திருக்கலாம். அவ்வாறில்லாமல், பொது உடன்படிக்கை, தனது பங்காளர்களின் வகிபாகங்கள், பொது அணிக்கான கட்சியினை தெரிவு செய்வதற்கு ஆலோசனை மட்டுமல்ல ஒழுங்கமைப்பு ஏற்பாட்டினையும் செய்தவர் என்ற வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் நேரடியாக சந்தித்து பேசிய பின்னரும், இது தொடர்பில் மௌனமாக இருந்துவிட்டு, திடீரென நியாஸ் எமது தலைவர் மீது அபாண்டங்களையும், பொறுப்பற்ற தரமற்ற வார்த்தைகளையும் பிரயோகிப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

இந்த நிலையில், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ர.தாஹிர் அவர்களும் புத்தளத்தை சேர்ந்தவர். அவருக்கும் புத்தளம் நகர மக்கள் நீங்கள் சொல்லுவது போன்று வாக்களித்துள்ளார்கள். இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது புத்தளத்துக்கானது. அது புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்துக்குரியது என்ற பெரும் மனப்பான்மை கொண்டவரகள் நாங்கள். எங்களிடத்தில் குறுகிய அரசியல் காழ்புணர்வு இல்லை. அதனால்தான் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் என்ற எண்ணத்தினை முன்வைத்து எமது பணி தொடர்கின்றது.

சகோதரர் நியாஸ் அவர்களுக்கு தற்போது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கலாம். அது எமது அறிவுக்கு தேவயற்ற விடயம். அதில் மூக்கினை நுழைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. இருந்தபோதும், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நியமிக்கப்பட்டவர் செய்யும் தவறுக்கான பொறுப்பை நாமே எடுக்க வேண்டும். அதேபோன்று, அதற்கான தீர்ப்பினையும் எமது கட்சியே எடுக்க வேண்டும். அதனையே கட்சியின் உயர்பீடம் எடுத்தது.

இந்த நிலையில், முஸ்லிம் கூட்டமைப்பு தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளதுடன், தங்களை போன்றவர்களை பயன்படுத்தி கதையினை வேறு திசைக்கு திருப்ப எடுக்கப்படும் ஒரு வேடிக்கையான அரங்கமாக, தங்களது ஊடக சந்திப்பை என்னால் பார்க்க நேரிட்டுள்ளது.

கட்சிகள் என்பது மார்க்கமல்ல! அது மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்படும் ஒரு அமைப்பு என்பதை புரிந்துகொள்ளும் காலம் கடந்துவிட்ட நிலையில், தேர்தல் ஒன்றை நோக்கிய பார்வையில் தற்போது காணப்படும் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஜனநாயம் என்ற போர்வையில் எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள்  மீது நீங்கள் சுமத்தியுள்ள பிழையான விமர்சனங்கள் பெரிதும் வெறுக்கத்தக்கதொன்றாகும் என்பதையும் இதன்போது நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஒரு உண்மையினை மறைப்பதற்கு எத்தனைமுறை தாங்கள் கடும் சொற்களை பயன்படுத்தினாலும் உண்மை ஒரு போதும் அழிந்துபோகாது. அது என்றாவது ஒரு நாள் பதில் கூறும் என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார். 


முஹம்மது ஆசிக், 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,

கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK