ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலவச சுகாதார சேவையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் தாமும் இணைந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு அம்சமாக ஏறாவூரிலும் இன்று வியாழக்கிழமை ( 09.11.2023 ) சுகாதார வைத்திய அதிகாரிகள்   கவன ஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

.அங்கு கவன ஈர்ப்பில் ஈடுபட்ட வைத்தியர்கள் “இலவச சுகாதார சேவையை அழிக்காதே, தரமற்ற மருந்துகளை மக்களுக்கு வழங்காதே, சுகாதார சேவையில் மனித வளத் தேவையைபப் பூர்த்தி செய், மூளைசாலிகளின் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்து” உள்ளிட்ட இன்னும் பல வேண்டுகோள்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.இதேவேளை, “நாட்டின் இலவச சுகாதாரத் துறை உங்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்தில்” என்ற தலைப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள மக்களுக்கான விழிப்புணர்வு பிரசுரங்களில், நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது ஆட்சியாளர்களின் பாரிய பொறுப்பாகும்.

இலவச சுகாதாரத்துறை நாட்டிலிருந்து பறிபோகப் போகும்  இந்த இக்கட்டான வேளையில்  சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் உறக்கத்தில் இருக்கின்றனர்.இலங்கை சுகாதாரத் துறையின் வீழ்ச்சியினால் பாதிக்கப்படப்போவது உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களினதும் உயிர்களே. இந்தப் பாரிய அழிவைத்; தவிர்த்துக் கொள்வதற்காக குரல்கொடுப்பது உங்களுடையதும் எங்களுடையதும் கடமையாகும” என மேலும் விரிவான விழிப்பூட்டும் விவரங்கள் அந்தப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன