எந்தச் சந்தர்ப்பத்திலும் மின் வெட்டை அமுல்படுத்த அரசாங்கம் தயாரில்லை


 *அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்

மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களால் நீர் மின் உற்பத்திக்கு ஏற்படும் தடைகளைக் கருத்திற்கொண்டு அடுத்த இரண்டு வருடங்களில், நாடு பூராகவும் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்குத் தேவையான மின் உற்பத்திக்கான மாற்று வழிமுறைகளைக் கையாள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

நீர்ப்பாசன திணைக்களத்துடன் கலந்துரையாடி நாம் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதன்படி, நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதுடன், வழங்க இயலுமான கொள்ளளவு நீரை, சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து விநியோகிக்கவும், அவ்வாறு விநயோகிக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தியை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.அந்த வகையில், இன்று காலை முதல் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் விநியோகிக்க ஆரம்பித்துள்ளதுடன் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் உயர் கொள்ளளவுக்கு ஏற்ப, தொடர்ந்து வரும் நாட்களில் நீர் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு மேலதிக நீரை விநியோகிப்பதன் மூலம் மின் உற்பத்தி பாதிக்கப்படுமாயின், தென் மாகாணத்தில் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், காலி மாவட்டத்தில் பகுதியளவிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் தேவையான மின்சாரத்தை கொள்வனவு செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஏற்கனவே முறையாக நீர் விநியோகத்தை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்படாது என்று அரசாங்கம் தொடர்பில் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்ப ஒரு சிலர் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மின்சக்தி, வலுசக்தி அமைச்சு என்ற வகையில் மின் உற்பத்திக்காக சமனலவெவ நீர்த்தேக்கம் மாத்திரே நேரடியாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதாகவும், ஏனைய அனைத்து நீர்த்தேக்கங்களும் நீர்ப்பாசன அமைச்சின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவுக்கு ஏற்ப நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நீர் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரையின் படி, மின் உற்பத்திக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுமாயின், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் கைத்தொழில்கள் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதுடன், குறிப்பாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுவது மாத்திரமன்றி மக்களின் இயல்பு வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் மின்சாரத்திற்குப் பதிலாக மாற்று வழிமுறையாக, எரிபொருள்களில் இயங்கும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த ஆரம்பிப்பார்களாயின், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதுடன், மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அச்சம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, ஒரு நெருக்கடியில் இருந்து இன்னும் பல நெருக்கடிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, முதல் நெருக்கடிக்குத் தீர்வாக இயலுமான கொள்ளளவு நீரைவிடுவிக்கவும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நெருக்கடிகள் ஏற்படாது, தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த அவசியமான மாற்று வழிகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், எமது நாட்டில் மின் உற்பத்திக்கு மாற்று வழிமுறையாக காற்று விசை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது அவற்றுக்கு பாரிய எதிர்ப்புகள் எழுவதாகவும், குறிப்பாக அண்மையில் மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிட்ட காற்றாலை நிர்மாணப்பணிகளுக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஒரு சில குழுக்களே தமது அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறு மக்களைத் தூண்டிவிடுவதாகவும் இத்திட்டங்கள் குறித்து மக்கள் முழுமையான தெளிவு இல்லாமலே இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு ஆளாவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, இருக்கும் நீர் கொள்ளளவைக் கருத்தில் கொண்டு நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளத் தேவையான பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதோடு, மின் வெட்டு தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்றும், இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

08.08.2023

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK