சிறுபான்மை இயலாமையால் கைநழுவிய முற்போக்கு தீர்வுகள்!

 


சுஐப் எம். காசிம்-

அதிகாரப்பகிர்வில் சிறுபான்மைச் சமூகங்கள் அடித்துக்கொள்வது உரிமைகளை அடைவதில் தடங்கலை ஏற்படுத்துமென்ற தெளிவு சில தமிழ்த் தலைவர்களிடம் இருந்தது. சிறுபான்மையினருக்கான  விடுதலைப்போர் சகோதரப் படுகொலைகள், சமூகப் பழிவாங்கல்களென   திசை திரும்பி உச்சக்கட்டத்திலிருந்த தொண்ணூறுகளிலும் கூட, அதிகாரப்பகிர்வில் முஸ்லிம்களின் அலகை சில தமிழ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். சிவசிதம்பரம், சம்பந்தன்  மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோரின் பாத்திரங்கள் இதில் அளப்பரியன. இதுபோன்று எம்.எச்.எம்.அஷ்ரஃப் உள்ளிட்ட சில முஸ்லிம் தலைவர்களின்  அணுகுமுறைகள், நமது  சமூக உறவுகள் வேரோடு பிடுங்கி எறியப்படாது பாதுகாத்து வருகிறது. 


தமிழ் மொழிச் சமூகங்களின் உள்ளூர் பிணக்குகளை தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுடன்   முடிந்துவிடக்கூடாது. இது, பௌத்த மேலாதிக்கத்தின் ஆதிக்கப்பாய்ச்சலுக்கு வழிகோலுவதாக அமையுமென்ற பாணியில், சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் கூறினார். 1996 இல் முஸ்லிம் மீடியா போரம் நடத்திய "அதிகாரப்பரவலாக்கமும் முஸ்லிம்களின் எதிர்காலமும்" என்ற கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் ஆற்றிய உரைக்கு பதிலாக அமைந்திருந்தது ஹக்கீமின் இந்த உரை.


நீலன் திருச்செல்வம் படுகொலையான 1999.07.30 நாளில் அவரது அன்றைய (1996) உரையை நினைவூட்டுவது பொருத்தம். முஸ்லிம் அதிகார அலகை மனப்பூர்வமாக ஏற்றிருந்த அவர், பேச்சுவார்த்தை  மட்டும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு  பலனளிக்காது, யுத்த நிறுத்தத்தையும் ஏற்படுத்த வேண்டுமென   உரையாற்றினார். அன்று, சந்திரிக்கா அரசாங்கத்தின் இதயமாகவும் அச்சாணியாகவும் இருந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், யுத்தத்தை நிறுத்த முன்வர வேண்டுமென்ற மனநிலையில் நீலன் திருச்செல்வம் இவ்வாறு பேசியிருக்கலாம். இதுவும், உள்ளூர் பிணக்குகள் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு தடையாக இருக்கக் கூடாதென்ற பொதுவுணர்வுதான். அல்லது சிறுபான்மையினருக்கான மொழியுணர்வாகவும் இதைக் கருதலாம். இப்போதெல்லாம், இவ்வாறான செயலமர்வுகள் மற்றும் சந்திப்புக்கள் அரிதாகிவிட்டன. அப்போது இப்படியில்லை. ஆக்கபூர்வமான அரசியல் செயலமர்வுகள், கருத்தரங்குகளில் பரிமாறப்பட்ட தகவல்களை தினகரனின் பிரத்தியேக (exclusive) செய்தியாகப் பெறுவதற்கு நள்ளிரவு வரை காத்திருந்தமை என் கண்களில் பனிக்கின்றன. இதுபோன்ற தொடர்புகளில்தான், நீலனின் கொழும்பு வீட்டுத் தொலைபேசி 0112688243 என்ற எண் இன்னும் என் எண்ணத்தில் உள்ளது.


............................

அரசியல் பேச்சுவார்த்தையினூடாக யுத்த நிறுத்தம் 

அதுவே மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 

முஸ்லிம் அதிகார அலகைக் கூட்டணி ஏற்றுக்கொள்கிறது  


முஸ்லிம் வெகுஜனத் தொடர்பு கருத்தரங்கில் நீலன் கருத்து!


இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு வெறுமனே அரசியல் பேச்சுவார்த்தை மட்டும் உரிய பயன் தரப்போவதில்லை. அரசியல் பேச்சுவார்த்தையினூடாக யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதன் மூலமே நமது நாட்டில் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருக்கும் இன மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கலாநிதி நீலன் திருச்செல்வம் கூறினார்.


இந்நாட்டில் உருவாக்கப்படும் எந்த ஓர் அரசியலமைப்புத் திட்டமும் ஒரு சமூகத்தின் தனித்துவத்தை பலப்படுத்தும் விதத்தில்தான் அமைய வேண்டும். இனப்பிரச்சினையின் தீர்வில் ஓர் அம்சமாக 'முஸ்லிம் அதிகார அலகு' ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணி பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றது. முஸ்லிம்களுக்கு அதிகாரப் பகிர்விலே நியாயமான பங்கு வழங்குவது பற்றியும் நாம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம். இது தொடர்பில் திரு. ரவூப் ஹக்கீமின் கருத்தை ஆதரிக்கிறேன்.


நேற்றுக் காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் வெகுசனத் தொடர்பு அமைப்பு, ஹோட்டல் ரண்முத்துவில் ஒழுங்கு செய்திருந்த "அதிகாரப் பரவலாக்கமும் முஸ்லிம்களின் எதிர்காலமும்" கருத்தரங்கில் உரையாற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் மேலும் கூறியதாவது,


மங்கள முனசிங்க பாராளுமன்றத் தெரிவுக்குழு இனப்பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணத்திலே இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருந்தது. இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடிப்படையில் அதிகார பரவலாக்கத்தை ஏற்படுத்தி, கூட்டு நிரலில் (Concurrent List) உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்குக் கொடுப்பது சம்பந்தமானதே அது. அத்தகைய இணக்கப்பாட்டுக்கு ஐ.தே.க. இனரும் ஸ்ரீ.ல.சு.க. இனரும் உடன்பாடு தெரிவித்திருந்தனர். அந்தத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஐ.தே.க. வைச் சார்ந்த டிரோன் பெர்னாண்டோ, விஜயபால மெண்டிஸ், ஏ.சி.எஸ்.ஹமீது, காமினி அத்துகோரளை, சொக்சி போன்றோர் ஆதரவளித்தனர். தற்போது ஐ.தே.க. இனர் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நியாயமான தீர்வைக் காண்பதற்கும் முட்டுக்கட்டையாக இருப்பதே வேதனையானது. "அரசியல் அலகு" என்ற விடயத்திலும் கூட முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் இதனைச் செயற்படுத்த முடியாது.


1972 இலும் 1978 இலும் மாறி மாறி வந்த அரசாங்கங்களுக்கு 2/3 பெரும்பான்மைப் பலம் இருந்தமையால் அரசியலமைப்பினை இலகுவாக உருவாக்க முடிந்தது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஐ.தே.க. இன் பூரண ஆதரவில்லாது செயற்படுத்தப்பட முடியாது.


இன முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டதற்கு இன்னுமோர் அடிப்படைக் காரணம் மொழிப் பிரச்சினையாகும். 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள மசோதாவினை எதிர்த்து காலிமுகத்திடலிலே, தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த சத்தியாக்கிரகத்தில், முக்கிய பங்காளியாக மசூர் மௌலானாவும் இருந்தவர். 1955ஆம் ஆண்டிலே பிரதமர் டட்லி சேனாநாயக்க தமிழ் மொழியை நிர்வாக மொழியாகவும் நீதிமன்றில் உபயோகிக்கும் மொழியாகவும் ஆக்கினார். 1978ஆம் ஆண்டில் இந்நாட்டில் தமிழ் மொழி 'தேசிய மொழி' என்ற அந்தஸ்தினைப் பெற்றது. 1987ஆம் ஆண்டிலே 16வது சரத்திலே சிங்களமும் அரசகரும மொழி, தமிழும் அரசகரும மொழி என்று பொறிக்கப்பட்டதேயொழிய, இரு மொழிக்கும் சம அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. எனவே, தற்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் யாப்பின் மூலம், இரு மொழிக்கும் சம அந்தஸ்தைக் கிடைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தின் மூலமும் கொள்கையளவின் மூலமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிக்கான அந்தஸ்து நடைமுறையில் இருக்கவில்லை. அரசகரும மொழித் திணைக்களத்துக்கு வழங்கப்படுகின்ற பணம் 30 இலட்சமாகவும் போருக்காகச் செலவிடப்படுகின்ற பணம் 50 பில்லியன் ரூபாவாகவும் இருக்கின்றது.


இந்நாட்டில் இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்கு விகிதாசார அடிப்படையில் அரசாங்கத் தொழில்கள் பங்கிடப்பட வேண்டும். இன விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இன்று நடைமுறையில் இல்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் 10% இற்குக் குறைவாகவே அரசு நிறுவனங்களில் தொழில்புரிகின்றனர்.  தோட்டத் தொழிலாளர்களோ ஆக 1%. அண்மையில் நடைபெற்ற அரச நிர்வாக ஆட்சேர்ப்பிலே 40 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்த போதும் தமிழ் பேசும் மகன் எவரும் இடம்பெறவில்லை.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ரவூப் ஹக்கீம் பேசுகையில்,


தமிழர்களின் போராட்டத்தில் முஸ்லிம்களுக்கும் பங்குண்டு. தனிச் சிங்கள மசோதா கொண்டுவரப்பட்டபோது, இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்தனர். அத்தோடு தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட அஹிம்சைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் பங்குபற்றிய சரித்திரம் உண்டு.


இந்நாட்டின் சரித்திரத்தில் அரசியல் சீர்திருத்தம் ஒன்றிலே முஸ்லிம்களை கலந்தாலோசிக்கும் சூழ்நிலையேற்பட்டமை ஒரு திருப்பமாகும். 72 ஆம் ஆண்டிலோ, 78 ஆம் ஆண்டிலோ, 87 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் போதோ முஸ்லிம்களின் நலன்கள் பேணப்படாத, அவர்களது அபிலாஷைகள் கருத்திற்கெடுக்கப்படாத அரசியல் சீர்திருத்தமே உருவாக்கப்பட்டது. முஸ்லிம்களின் அரசியல் பரிணாமம் மறுக்கப்பட்டதால், புறக்கணிக்கப்பட்டதால் முஸ்லிம்களிடமிருந்து தலைமைத்துவம் ஒன்று வெளிக்கொணரப்பட்டது.


சிங்களவரின் அரசியல் மேலாதிக்கம் மத்திய அரசில் மேலோங்கியதன் காரணமாகவே தமிழர்களால் பிரதேச சுயாட்சி முன்வைக்கப்பட்டது. இதே பிரச்சினையை முஸ்லிம்களும் எதிர்நோக்கினர். அத்தோடு, வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களின் அரசியல் மேலாதிக்கத்தின் காரணமாகவும் மலினப்படுத்தப்பட்டுள்ளனர். எனவேதான், முஸ்லிம்களுக்கான தனியலகுக் கோரிக்கை அழுத்தப்பட்டு வருகின்றது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் ஆணை பெற்ற, ஆதரவு பெற்ற ஒரு கட்சி. எனவே, எங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பை நன்முறையில் நிறைவேற்றுவோம். 


தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைமைத்துவமான த.வி.கூ. யோடு இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம். பேச்சுவார்த்தையின் போக்கு சாதகமானதாகவேயுள்ளது. 


வடக்கும் கிழக்கும் இணைவதால் முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கும் தனித்துவமும் மலினப்படுத்தப்பட்டுவிடும் என்பதன் காரணமாகவே, தென்கிழக்கு மாகாணக் கோரிக்கையினை வலியுறுத்தி வருகிறோம்.


புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண்பதில் மிகுந்த முனைப்புக்காட்டி வருகின்றது. தெரிவுக் குழு இதுவரை 30 தொடக்கம் 35 அமர்வுகளை நடாத்தியுள்ளது. எதிர்வரும் பட்ஜட் காலத்திலே 45 அமர்வுகளும், குழு நிலை விவாதத்தின் போது 30 அமர்வுகளும் நடைபெறவிருப்பதால், ஒவ்வொரு நாளும் தெரிவுக் குழுவை தொடர்ச்சியாகக் கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளோம். ஆக நகல் சட்டம் துரிதப்படுத்தப்பட்டு, தீர்வின் அவசியமும் அவசரமும் உணரப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது என்றார்.


தகவல் தொடர்பு சாதன பிரதியமைச்சர் எஸ்.அலவி மௌலானா பேசுகையில்,

இந்நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கலாம். ஆனால், அவர்கள் இரண்டாந் தரப் பிரஜையாக வாழ ஒருபோதும் விரும்பவில்லை. அரசியல் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படுவதற்கு சமூகங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஒருவர் மற்றவரை மதித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையே கலந்துரையாடுவதன் மூலமே இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.


இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் சுதந்திரமாகச் செயலாற்றக் கூடிய உரிமையும் வேண்டும். எமது அரசாங்கம் இந்த அம்சங்களைக் கடைப்பிடிப்பதற்கு இடமளித்துள்ளது. பத்திரிகையாளர்கள் தங்கள் பேனாக்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்


இக்கருத்தரங்கினை அடுத்து, வருடாந்த மாநாடும் உத்தியோகத்தர் தெரிவும் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். முஸ்லிம் வெகுஜனத் தொடர்பாளர் அமைப்பின் தலைவர் எஸ்.பி.சி.ஹலால்தீன் தலைமையில் இடம்பெற்றது. கருத்தரங்கின் காலை அமர்வின்போது, சேர் அப்துல் டபிள்யு.எம்.அமீர் 'காதிமே உம்மா' (சமூகத் தொண்டன்) என்ற பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK