முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்டும் சமூகக் கடமைகளை சரிவரச் செய்த சமூக நிறுவனங்களை வாழ்த்தியவனாக இந்த வரலாற்றைப் பதிவிடுகிறேன். உயிர் பிரிந்து உலகத் தொடர்பு அறுந்தாலும் நிலையான தர்மமும், பயனுள்ள கல்வியும், நேரிய குழந்தைகளின் பிரார்த்தனைகளும் மறுமை வரை நிலைக்குமென நபி மொழி உள்ளது. எமது சமூகத்திலுள்ள எத்தனை நிறுவனங்களின் சேவைகள் இப்படி இறைவனிடத்தில் நிலைக்கும்.
இன்று, ஜாமியா நளீமியாவின் பொன்விழா, நாளை முஸ்லிம் மீடியா போரத்தின் வெள்ளி விழா. இவை சமூகத்தில் உண்டாக்கிய விழிப்புக்களில் "தினகரன்" மடியை விரித்ததையும், எனது பேனா நனைந்ததையும் நான் நினைக்கிறேன். இந்த நினைவுகளில், தினகரன் இப்படிப் பலவற்றுக்கு களம் கொடுத்ததும் கனதியாய் நிலைக்கிறது.
கொழும்பு மத்திய தினகரன் நிருபராக இருந்த நேரத்தில்,1996.02.03 சனிக்கிழமை முஸ்லிம் மீடியா போர நிதிய அங்குரார்ப்பண விழா நடந்தது. ஜே.ஆர்.ஜெயவர்தன நிலையத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் பங்கேற்க, கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி உரையாற்றினார். இதைக் குறிப்பெடுத்து, கைப்பட எழுதி தினகரன் பத்திரிகைக்கு அனுப்பியதன் பிரதி ஒன்று பத்திரமாக எனது பெட்டகத்திலிருந்தது. காலமோடிய வேகம் கருத்தில் பட்டு கண்களைக் கலக்கியது.
எமது விடிவு, விழிப்பு இவற்றுக்கான தேடலிலே மர்ஹும்களானோருக்காக சொர்க்க வாசல்கள் திறக்கட்டும். தொடர்ந்து உழைப்போருக்கு சோபனம் உண்டாகட்டும்.
(கொழும்பு மத்திய தினகரன் நிருபர் எம்.சுஐப்)
இன்று உலகத்திலே நாடுகளை வெற்றி கொள்வதற்காக மட்டும் போராட்டம் நடத்தப்படவில்லை. மக்களின் உள்ளங்களில் மேலாதிக்கம் செலுத்துவதற்காகவும் மக்களின் கருத்தோட்டங்களை மாற்றி அமைப்பதற்காகவும் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இக்கருத்துத் தாக்கத்தின் முக்கிய ஆயுதங்களாக தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் விளங்குகின்றன.
இவ்வாறு கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் வெகுசனத் தொடர்பு அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர்பு சாதன அபிவிருத்தி நிதிய வைபவத்தின் போது
"தொடர்பு சாதனங்களும் முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
நாம் தொடர்பு சாதனங்களினால் ஆட்படுத்தப்பட்டிருக்கும் ஒரு உலகத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
கருத்துக்கள், செய்திகள் ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு மிகவும் வேகமாக, விரைவாக பரவுகின்றன. இத்தொடர்பாடல் சாதனங்கள் முழு மானிட சமூகத்தினையும் பின்னிப் பிணைத்து, பிரிக்க முடியாதளவுக்குள்ளாக்கி விட்டது.
உலகம் ஒரு பிரபஞ்சக் கிராமம் (Global Village) என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. மனிதனது கருத்தை கண்ணோட்டத்தில் நிர்ணயிக்கின்ற அளவுக்கு தொடர்பு சாதனம் வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளது.
மனித இனம் மாற்றத்துக்குட்பட்டது. மாறுதல் அடையக் கூடியது. இந்த மாற்றத்தினையும் மாறுதலையும் ஒவ்வொரு தனி மனிதனும் சமூகமும் அவதானித்தல் வேண்டும். அதற்கேற்ப தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
வெகுசனத் தொடர்பு சாதனம் என்பது கருத்துக்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற ஒரு சாதனமாகும். இச் சாதனத்தின் நோக்கத்தினை, அதன் பணியினை நான்கு வகையாக ஓர் அறிஞன் நோக்குகின்றான். மக்களுக்கு அறிவுறுத்துவது, போதிப்பது, கருத்தை எடுத்துச் சொல்வது, அதனை விளக்குவது என்பதே அதன் பணிகளாகும்.
மேலைத்தேய நாடுகளில் கருத்துக்களை வெளியிடுவதற்கும் எண்ணங்களை பரிமாறுவதற்கும் எந்த விதமான தடைகளும் இல்லை. அங்கே கருத்துச் சுதந்திரம் தாராளமாகவும் மனம்போன போக்கிலும் காணப்படுகின்றது.
இந்தக் கருத்துச் சுதந்திரத்தின் விளைவாக இரண்டு விடயங்கள் நடைபெறுகின்றன. ஒன்றைத் தெரிந்துகொண்டே வேண்டுமென்றே தவறான செய்தி வழங்கப்படுகின்றது. (Mis Information)
ஒன்றைத் தெரியாமல் சரியான தகவல்களை பெறாது செய்திகள் வெளியிடப்படுகின்றது. (Dis Information)
மேலைத்தேய கருத்துச் சுதந்திரத்தின் விளைவினால் அரசியல் மற்றும் இதரக் குழுக்களினால் செய்திகள் உற்பத்தியாக்கப்படுகின்றன. சிருஷ்டிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் பண்டங்களை உற்பத்தி செய்வது போன்று செய்திகளும் உருவாக்கப்படுகின்றன. அத்தோடு செய்திகள் முற்றிலும் திரிபுபடுத்தப்படுகின்றன.
மேலைத்தேய நாடுகளில் இஸ்லாமிய உலகில் பரவி வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி பற்றிய, இஸ்லாமிய எழுச்சி பற்றிய நியாயமான அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தின் காரணமாக இஸ்லாத்தினையும் முஸ்லிம்களையும் பயங்கர சக்தியாக மாற்றி மனித சமூகத்தை எச்சரிக்கும் பாணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காகவே இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற சொற்களை உருவாக்கி, அவைகளை உலக நாடுகளில் பரவச் செய்து வருகின்றனர்.
முஸ்லிம் நாடுகளை பொறுத்தவரையிலும், ஏனைய முஸ்லிம்கள் வாழுகின்ற நாடுகளில் கூட இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தகவல்களைப் பெறுவதற்காக மேற்கத்தேய செய்தித்தாபனங்களிலே தான் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
46 முஸ்லிம் நாடுகளில், 544 தினசரி பத்திரிகைகளும் 1227 மாத இதழ்களும் 1037 வார இதழ்களும் 69 இதர சஞ்சிகைகளும் வெளியிடப்படுகின்றன. இப்பத்திரிகைகளில் 80% ஆனவை அவற்றின் தகவல்களை பெறுவதற்காக முற்றிலும் மேலைத்தேய தகவற் சாதனங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. யூதர்களின் ஆதிக்கத்திலேயிருக்கின்ற ஏ.ஐ, ஏ.எப்.ஐ, யூ.பீ.ஐ, ராய்ட்டர்ஸ் போன்ற சர்வதேசியச் செய்தி நிறுவனங்களில் இருந்தே இத்தகவல்கள் பெறப்படுகின்றன.
இலங்கை போன்ற பல்லின நாட்டிலே செய்திகளைத் திரித்தும், மாற்றியும் வெளியிடுவதற்கு தாராளமாக இடமிருக்கின்றது. தொலைக்காட்சி, நாடகம், பத்திரிகை போன்றவை முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பற்றிய செய்திகளைத் திரித்தும் சிதைத்தும் மாசுபடுத்தியும் கூறப்படுகின்றது.
இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. வெகுசனத் தொடர்பாளர்கள் இஸ்லாத்தைப் பற்றிய அறிவினை போதியளவு பெறாமல் இருத்தல் அல்லது வேண்டுமென்றே உண்மையினை தெரிந்துகொண்டு இஸ்லாத்தினைச் சிதைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல் போன்றவையாகும்.
எது எப்படியிருந்தபோதும், வெகுசனத் தொடர்பாளர்களுக்கு இஸ்லாத்தினைப் பற்றிய அறிமுகத்தினையும் பரிச்சயத்தினையும் கொடுப்பது எமது கடமையாகின்றது. அத்தோடு, இஸ்லாமிய சமூகத்துக்கு வெகுசனத் தொடர்புச் சாதனங்களைப் பற்றிய அறிவை வழங்க வேண்டும். இந்த இரண்டு வேலைகளையும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் மேற்கொள்வது அத்தியாவசியம்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் இன்று நாம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றோம். இன்று நாம் வாழும் உலகம் தகவல், செய்திப்பரிமாற்றம் வேகமாக நிகழும் யுகமாகும். மக்களினது சிந்தனை, கருத்தோட்டத்திலே தகவற் சாதனம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.
எங்கள் சமூகத்தில் தகைமை வாய்ந்த, பயிற்சி பெற்ற, பத்திரிகைத் துறையில் புலமை பெற்ற பத்திரிகையாளர்கள் குறைவாகக் காணப்படுகின்றனர்.
இத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களை ஊக்கப்படுத்தியும் புலமைப் பரிசில் வழங்கியும் தரம் வாய்ந்த பத்திரிகையாளர்களை உருவாக்குவது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகின்றது.
சுஐப் எம்.காசிம்-
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK