குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் கார் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றதாகவும், ஷானி அபேசேகரவின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற போது ஷானி அபேசேகர வீட்டில் இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிள் அவருக்கு அறிவிக்கவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷானி அபேசேகர தனது காருக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சென்ற வேளையில், காரில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.
அதன்பின்னர், காரை திருத்துவதற்காக அனுப்பியபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையினால் காரில் துவாரம் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஷானி அபேசேகரவின் வீட்டின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம், பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால், அவரின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK