நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக, இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அவ்வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலம் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி அவர் சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார்.

இதேவேளை, தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்கள் கடந்த 21 ஆம் திகதி அழைக்கப்பட்டபோது, அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாதிருப்பதற்கு நீதியரசர் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த ஐந்து அடிப்படை உரிமை மனுக்களும் உயர்நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டன.

தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கபோவதில்லை என தம்மிக பெரேரா கடந்த திங்கட்கிழமை உயர்நீதிமன்றிற்கு அறியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்ற தீர்ப்பு வெளியானதையடுத்து, மறுநாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார்.