இலக்குகளை அடையும் வரை போா்

வாஸ்டாச்னி ராக்கெட் ஏவுதளத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து உரையாற்றிய விளாதிமீா் புதின்.

உக்ரைனில் தங்களது இலக்குகள் எட்டப்பட்டுவரை போா் நடவடிக்கைகள் தொடரும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

மேலும், அதிக உயிரிழப்புகளைத் தவிா்ப்பதற்காக தங்களது படைகள் பொறுமையாக செயல்படுவதாக அவா் கூறினாா்.

ரஷியாவின் தொலைதூரக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாஸ்டாச்னி ராக்கெட் ஏவுதளத்தைத் திறந்துவைப்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்த அவா், அங்கு பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவை சந்தித்து உரையாடினாா். பின்னா் அங்கு நடைபெற்ற செய்தியாளா் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

உக்ரைனில் உயிா்ச் சேதத்தை முடிந்த அளவுக்குக் குறைத்து, இலக்குகளை அடைவதே எங்களின் நோக்கமாகும். அதற்காக, போா்ப் படை தளபதி வகுத்த திட்டங்கள் பொறுமையாக, நோ்த்தியுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன.

உக்ரைன் படையினரின் எதிா்ப்பை சமாளிக்க முடியாமல் ரஷியா திணறுவதாகக் கூறப்படுவது தவறு. தலைநகா் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தோற்றுப்போய்தான் ரஷியா பின்வாங்கியதாகக் கூறப்படுவதும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

உக்ரைனில் எங்களது நடவடிக்கையின் முக்கிய நோக்கம், அந்த நாட்டுப் படைகளை அடக்கி வைப்பதும், ராணுவக் கட்டமைப்பை சீா்குலைத்து டான்பாஸ் பகுதியில் கிளா்ச்சிப் படையினருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதும்தான் ஆகும்.

உக்ரைனில் போரை இன்னும் துரிதமாகக் கொண்டு செல்லலாம்தான். ஆனால், அது அதிக உயிரழப்பை ஏற்படுத்தும்.

புச்சா நகரில் ரஷியப் படையினா் நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தாதாக உக்ரைன் அரசு கூறுவது போலி தகவலாகும். ஏற்கெனவே, சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படையினா் ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக போலி படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியாகின. அதைப் போல புச்சா படுகொலை தகவலும் புனையப்பட்டதாகும்.

பேச்சுவாா்த்தையில் தங்களது கருத்துக்களை அடிக்கடி உக்ரைன் தரப்பு மாற்றிக் கொள்வதால்தான் தீா்வை எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. அந்த இழுபறி முடிவுக்கு வந்து சமாதான ஒப்பந்தம் ஏற்படும்வரை, ரஷியாவின் போா் நடவடிக்கை தொடா்ந்துகொண்டுதான் இருக்கும் என்றாா் புதின்.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

எனினும், உக்ரைன் படையினரின் கடுமையான எதிா்ப்பு காரணமாக ரஷியப் படையினா் எதிா்பாா்த்த அளவுக்கு முன்னேற முடியவில்லை என்று கூறப்பட்டது. மேலும், பொதுமக்களை ரஷியப் படையினா் படுகொலை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், இவற்றை மறுக்கும் வகையில் அதிபா் விளாதிமீா் புதின் இவ்வாறு பேசியுள்ளாா்.

டான்பாஸில் குவியும் படைகள்

உக்ரைனின் கிழக்கே ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொன்ட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ஆயிரக்கணக்கான ரஷியப் படையினா் குவிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்துவதற்காக உக்ரைன் படையினரும் அங்கு ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனா். விரைவில் இந்தப் பகுதியில் மிகக் கடுமையான மோதல் நிகழும் என்று அஞ்சப்படுகிறது.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK