கடன்பொறியை கைவிட கையாள்வது எதை?

-சுஐப் எம். காசிம்- 

குடும்பமொன்று பயணிக்கும் தோணியில் ஓட்டைவிழுந்து, மூழ்கும் ஆபத்து ஏற்பட்டால் தோணியை கரைசேர்ப்பதுதான் குடும்பப் பொறுப்பாக இருக்கும். அப்படியிருப்பதுதான், உறவுக்கும்  இரத்தப் பிணைப்புக்கும் அழகு. ஓட்டை எப்படி ஏற்பட்டது என்ற ஆராய்ச்சியோ? அல்லது சர்ச்சையோ? இச்சந்தர்ப்பத்தில் உயிர்களைப் பாதுகாக்காது. இப்படியொரு சிக்கலிலே எமது நாடும் நட்டாற்றில் நிற்கிறது. எனவே, கரையேறுவதில்தான் கவனங்கள் இருக்க வேண்டும். நாமெல்லோரும் மூழப்போகும் ஆபத்தாக இதை நாம் மாற்றிவிடக்கூடாது. இந்த ஆபத்து ஏற்பட்ட காரணம் இனி ஏற்படக் கூடாது என்பதில் செலுத்தப்படும் கவனங்கள்தான், தேசப்பற்றைத் தோற்றுவிக்கும். பொருளாதார காரணிகளுக்கு வேறு

சாயம்பூசும் முயற்சிகள் எல்லாம், நாட்டுப்பற்றுக்கு எதிரான நகர்வுகளாகத்தான் மக்களால் நோக்கப்படும். 

வெளிநாட்டு நன்கொடைகள், அந்நியச் செலாவணி வருமானம், கடன் பெறுகை, தங்கத்தின் இருப்பு இன்னும் ஏற்றுமதி வருமானங்களுக்கு என்ன நடந்தது?நாணயப் பெறுமதி ஏன் தேய்ந்து போகிறது? இவைகள்தான் ஆராயப்பட வேண்டியவைகள். இந்த ஆராய்ச்சிகளில் எந்த ஆதாயங்களும் இருத்தலாகாது. எல்லோருமே இறக்குமதி பொருளாதாரத்துக்கு பழகிப்போயுள்ள இந்த நாட்டில், உள்நாட்டு உற்பத்தியை சிந்திக்க எவரும் தயாராக இல்லை. 

எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை ஏன்? மின்சாரமும் குறைவு இவற்றையா இவர் உற்பத்தி செய்யச் சொல்கிறார். என்று கேட்காதீர்கள். நமக்குத் தேவையான டொலரை அல்லது பொருளைப் பெறுவதற்கு நமது தேவைகளை சர்வதேசத்தில் ஏற்படுத்துவோம். தெம்பிலி, தேன், கருவாடு, தயிர், தீன்பண்டங்கள் மாம்பழம், மலர் வகைககளை உற்பத்தி செய்யலாம். இவற்றை ஏற்றுமதி செய்யாவிடினும் இவற்றுக்காகவே வெளிநாட்டினரை இங்கு வரவழைக்கலாமே. இங்கு வருவோர் இப்பொருட்களை கொள்வனவு செய்யும் கொள்ளை அழகுகளை நாம் கண்டதில்லையா? மத்தளை விமான நிலையத்தால் வரும் வெளிநாட்டினர் நாளாந்தம் பத்தாயிரம் "யோகட்" களை வாங்குவது பற்றியும் நமக்குத் தெரியுமே!கண்டி, கடுகண்ணாவை பிரதேசப் பழங்கள், கைப்பணிப் பொருட்களையும் இவர்கள் வாங்குகிறார்களே! வட பகுதியில், பனை உற்பத்தி பொருட்களின் கிராக்கி உயர்வதும் வெளிநாட்டுக் கேள்விகளால்தான். இவற்றை உற்பத்தி செய்யவே இன்று நிலமில்லை. அபிவிருத்தியென்ற போர்வையில் நிலங்கள் அழிக்கப்படுவதும், அகழப்படுவதும்தான், நமது ஏற்றுமதிகளை இல்லாமல் செய்துள்ளன. 

இது போதாதென்று, சர்வதேச நாடுகளுக்குள்ள நமது நாட்டின் மீதான நாட்டங்களும் நமது பொருளாதாரத்தை நலிவடையச் செய்திருக்கிறது. மின் உற்பத்திக்கும், எண்ணெய்க்குத ஏற்பாட்டுக்கும் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் பல, நமது நாட்டின் பாதி பொருளாதாரத்தை வெளியில் பாய்ச்சச் செய்கிறது. இந்த நாடுகள் இதற்கான தொழினுட்பத்தை வழங்கி, எமது நாட்டுக்கே உற்பத்தி உரிமைகளைத் தருவது பற்றிச் சிந்திக்கவில்லையே! 

சவூதியில் சுப்பர் பெற்றோல் இருக்கிறது, ஆனால் அணுகுண்டை உற்பத்தி செய்யும் ஆற்றலில்லை. இதனால், சில சக்திகளுக்கு முன்னால் இயலாமலாகிவிடுகிறதே இந்நாடு. இப்படித்தான் இங்கும். இதுவும் போதாதென்று இங்கு படித்துத் தேர்ந்த மூளைசாலிகளும் டொலர் தேசங்களில்தானே தொழில்புரியச் செல்கின்றனர். இதனால், இலங்கையின் மூளை வெளியேறுகிறது. ஆனால், வரவேண்டிய டொலர் அங்கேயே சுழல்கிறது. 

இதற்காகத்தான் இயற்கை காணிகள் மற்றும் வயல்காணிகளை பாதுகாக்குமாறு கோரப்படுகிறது. விவசாய காணிகளை மண்ணிட்டு நிரப்புவதை தடுக்க சட்டம் இயற்றப்பட்டதும் இதற்காகத்தானே! இரண்டு வருடங்கள் கொரோனாவால் நாம் முடங்கியிருந்த காலத்தில், சுகாதாரத் துறைக்கு நாம் வழங்கிய ஒத்துழைப்புக்களின் அவசியம்தான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்தோம் உணவு தரப்பட்டது. வேலைக்குச் செல்லாது சம்பளம் வழங்கப்பட்டது. பயந்திருந்தோம் மருந்துகள் தரப்பட்டன. அப்போது அரசாங்கம் தந்ததைப் போன்று இப்போது மக்கள் வழங்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. 

எதை? ஒத்துழைப்புக்களைத்தான். பதுக்கல், பற்றாக்குறை ஏற்படுத்தலை தவிர்த்தல், இன்னும் யதார்த்தங்களை உணர்தல்களே! மக்களால் வழங்கக் கூடிய ஒத்துழைப்பு. குளிர் நீர் தேவையா? முட்டித் தண்ணீரை அருந்துவோம், ஒவ்வொரு மின்விசிறியில் தூங்காது ஒரே மின்விசிறியில் தூங்குவோம், அங்கர் தட்டுப்பாடா? ஒரு வேளை டீ குடிப்போம். எரிவாயு குறைபாடா ஒற்றைச் சமையலில் நிறைவு காண்போம். நிலைமைகள் நீங்கும் வரை.



News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK