முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டிலிருந்த 16 வயது சிறுமி தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறையினருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேற்படி சிறுமியை கடந்த வருடம் டயகம பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அழைத்து சென்ற நபரிடம் இன்று வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியின் தாய் மற்றும் ரிசாட் பதியுதீனின் மனைவியினது தந்தை ஆகியோரிடம் நேற்று(18) மேலதிக வாக்குமூலம் பெற்றதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படது  இஷாலினியின் பிரேதம் மீதான பரிசோதனைகள் கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு விசேட சட்டவைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.

விசேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விசேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக், 3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன் அதில் இஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இஷாலினி எந்தவிதமான சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு கோரி ஹட்டன் நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

இதேவேளை குறித்த சிறுமி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 13 தினங்களின் பின்னர் உயிரிழந்தார்.