எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி ரியாஜ் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ ஜயசேகர, அதன் பணிப்பாளர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன்னை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி முதல் முறையாக கைது செய்யப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சரியான காரணங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்பட்ட போதிலும் அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.