விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

PAID ADD

PAID ADD

PAID ADD

PAID ADD

Paid Add

Paid Add

PAID ADD

PAID ADD

மாகாண சபை தேர்தலை ஜெனீவாத் தீர்மானத்துடன் செருகும் வியூகம்!


சுஐப் எம்.காசிம்-

நாட்டில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல கட்டியங்கள் கூறப்படுகின்றன. ஜெனீவாத் தீர்மானம் எதுவும் செய்துவிட முடியாதென்கின்றனர் சிலர். அடுத்த அமர்வுக்குள் எதையாவது செய்துவிட்டுத்தான் ஜெனீவாவுக்குச் செல்ல நேரிடும் என்கின்றனர் பலர். எனினும் எதையாவது செய்துதான் ஆகவேண்டும் என்பதை, ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்துக்களில் தெரிந்துகொள்ள முடிகிறது. அரசாங்கத்தைக் காப்பாற்றாவிடினும் நாட்டைக் காப்பாற்றும் நோக்கில், தாம் சிந்திப்பதாக மக்களுக்கு வெளிப்படுத்தும் அரசியல் நோக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லாமல் விடுமா? இதற்காகத்தான், ஜெனீவா  தீர்மானங்களை அமுல்படுத்துவற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கும் என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி.

இந்த அரசாங்கத்தால்தான் நாடு இப்படி நெருக்கடிகளை எதிர்கொள்கிறது, அதற்காக மக்களையும், மண்ணையும் பலிக்கடாக்களாக முடியாது என்பதுதான்  சஜித் பிரேமதாசாவின் சாணக்கியம். வரப்போவது மாகாண சபைத் தேர்தல், வந்துள்ளது உள்ளூர்ப் பொறிமுறையிலான போர்க்குற்ற விசாரணை, செய்ய வேண்டியது சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம். ஆனால், செய்வதில் சங்கடமானது காணாமல் போனோரின் விசாரணைகள். இவைகள்தானே, ஜெனீவாப் பிரேரணைகளில் பிரதானம். இவை எல்லாவற்றையும் சேர்த்தாற்போல், போட்டுவிட்டது பந்தயத்தை. மாகாண சபைத் தேர்தலில் ஆடிய கையோடு, அடுத்த களத்தில் மறு கை பார்ப்பதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த திட்டம்.

ஏன், 2013 இல் ஊவாவைப் புரட்டி, முழு நாட்டையும் நல்லாட்சி அரசாங்கம் ஆண்டமை சஜித்துக்கென்ன தெரியாத சங்கதியா? கடும்போக்கர்கள் கர்ஜிப்பதற்காகவும் இன்னும் சிலரின் எறிகணைத் துள்ளலுக்காகவும் மாகாண சபைத் தேர்தல்களை இல்லாதொழிக்கவோ அல்லது தொடர்ந்தும் தள்ளிப்போடவோ முடியாது. கச்சைதீவு ஒப்பந்தமே இன்னும் நடைமுறையில் இருக்கையில், ஒரு அதிகாரப் பகிர்வின் அடையாளத்துக்கு அறிமுகமான இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை இல்லாமலாக்க முடியாதே!

அதிகமான தமிழ் ஆயுதக் குழுக்களை ஜனநாயக நீரோட்டத்துக்குத் திருப்பியதும் இந்த மாகாண சபை முறைமைகள்தானே. இதை நடாத்தி முடிக்குமாறுதான் ஜெனீவாவில், இந்தியா நடுநிலைமை வகித்திருக்கிறது.அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சர்வதேசத்தின் தொடர் அழுத்தங்களை நிராகரிக்க முடியாத நிலையிலிருக்கிறது. இதனால், ஏற்படவுள்ள உள்ளூர் அரசியல் நெருக்கடிக்குச் சமமான அயல்நாட்டு நெருக்கடிகளும் அரசுக்குத் தலையிடிதான்.

சிறுபான்மையினர் எல்லோரும் எண்ணியுள்ள பௌத்த நலன்விரும்பி எனப்படும் ஜனாதிபதியே, இந்தத் தேர்தலை நடாத்துவதில் காட்டும் ஆர்வமே போதும் அரசின் நெருக்கடிக்கு. அவரது தலைமையில் மார்ச் 29 இல் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி அவசரமாகப் பேசப்பட்டு, கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு இவ்விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறையிலுள்ள சில விடயங்கள், சில சிறிய கட்சிகளைப் பாதிப்பதாக உள்ளதைச் சுட்டிக்காட்டியே, கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு இது பாரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லாக் கட்சிகளும் அமைச்சரைவையில் இல்லையென்பது தெரியும்தானே. இதிலிருந்து புதிய முறையில்தான், தேர்தல் நடத்தப்பட முயற்சிக்கப்படுகிறது என்ற முடிவுதான் பொருந்துகிறது. எந்த முறையில் நடத்துவதும் இந்த அரசுக்குப் பிரச்சினையில்லையே. எம் முறையானாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறதே! இதுதான் நல்லாட்சி அரசின் அரசியல் லீலைகள்.

பழைய முறையில் செல்வதற்கு புதிய முறையை இல்லாமலாக்க வேண்டும். புதிய முறையை நிறைவேற்றுவதற்கு பழையதை இல்லாமலாக்குவது அவசியம். இவையிரண்டுக்கும் இடையில் சிக்கித்தான் இந்தச் சட்டம் கிடக்கிறது. இதில், எதைச் செய்வதானாலும் 150 பலம் தேவை. உள்ள நெருக்கடியில், ஒரு சில கட்சிகள் எதிர்த்தாலும் சகல தமிழ் கட்சிகளும் ஆதரித்தே ஆக வேண்டும். இந்தியாவின் விருப்பத்தையும் அதிகாரப் பகிர்வின் அடையாளத்தையும் உதறித்தள்ள இவர்களுக்கு முடியாதே! இவர்களின் இந்த இயலாமை, இழக்கச் சாத்தியமான 150 ஐ தந்துவிடும்தானே! இப்படித்தானுள்ளது நிலைமை.

இப்போது பேசப்படுவது புதிய முறைபற்றித்தான். இதில், மூன்று விடயங்கள் உள்ளன. எழுபது வீதம் தொகுதியிலும், முப்பது வீதம் விகிதாசாரத்திலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.மாகாணங்களை வெல்கின்ற கட்சிகளுக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் என்ற நிலை இல்லாமலாகி, ஒவ்வொரு மாவட்டங்களையும் வெல்லும் கட்சிகளுக்கு இவ்விரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே ஒன்பது மாகாணங்களுக்கும் இவ்விரண்டு என ஒதுக்கப்பட்டு 18 ஆக இருந்த ஆசனங்கள் இப்புதிய முறையில் 36 ஆக அதிரிகரிக்கிறது. இதனால், ஏற்கனவே இருந்த 455 உறுப்பினர்கள், அதிகரிக்கப்பட்டுள்ள போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 473 ஆக உயர்ந்துள்ளது. இதில்,இரண்டு மாவட்டங்களுடைய மாகாணங்கள் 04 போனஸ் ஆசனங்களையும், மூன்று மாவட்டங்கள் உள்ள மாகாணங்கள் 06 போனஸ் ஆசனங்களையும் பெறும்.

மாகாணத்தில் பலமான ஆட்சியைக் கொண்டு வரவே இந்த ஏற்பாடு. தற்போது உள்ளூராட்சி சபைகளில் நிலவும் இழுபறியைக் கருத்தில் கொண்டுதான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எல்லாக் கட்சிகளும் குழம்பும் விடயமும் இதிலுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒரே கட்சி சார்பில் மூன்று வேட்பாளர்களை நிறுத்துவதென்பதே அது. இது, ஏற்கனவே உள்ள விகிதாசார முறையில், விருப்புவாக்குகளுக்காக மோதும் சூழலை ஏற்படுத்தும் என்றுதான் எதிர்க்கப்படுகிறது. பங்காளிகளாக உள்ள சிறிய கட்சிகளின், குறிப்பாக அரசாங்கத்தில் பங்காளிகளாக உள்ள சிறிய கட்சிகளைக் குறிவைக்கும் தந்திரம் என்றுதான் பரபரக்கப்படுகிறது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK