நிந்தவூர் கவி லத்தீப் பாத்திமா சப்னா செந்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்


01.நிந்தவூர் கவி நீங்கள் உங்களைப் பற்றிய அறிமுகத்தை தாருங்கள் எங்களுக்களுக்காகவும் எங்களது வாசக இதயங்களுக்காவும்?

எனது பெயர் லத்திப் பாத்திமா சப்னா. நான் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் எனும் ஊரில் வசித்து வருகிறேன்.

நான் நிந்தவூர் கவி எனும் புனைப்பெயரில் கவிதைகள், கட்டுரை,மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன் அதுமட்டுமல்லாது தேவதையின் விழிகளில் ஓராயிரம் கனவுகள் எனும் சமூக வலைத்தள பக்கத்தின் ஊடாக தொடர்கதை மற்றும் தொடர் கவிதைகள் குறும் கவிதைகளையும் எழுதி வருகிறேன். ஊடகவியல் கற்கைநெறி  பாடத்தினை முடித்துவிட்டு

சுயாதீன ஊடகவியலாளராகவும் தற்போது பொது ஊடகங்களில் பேசப்படாத  செய்திகளை கதைகளாக திட்டமிடும் கையடக்க தொலைபேசி ஊடகவியல்(mobile journalism) கற்கை நெறியை முடித்துவிட்டு  கையடக்கத்தொலைபேசி ஊடகவியலாளராகவும்(mobile journalist) 

I Voice எனும் அமைப்பின் நிருபராகவும், சமூக வலைதள பக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளராகவும்,

ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக (public relations manager),  இலாப நோக்கமற்ற மற்றும் சமூக சேவைகள் பல செய்து வருகின்ற international kinniyan Mamu private limited எனும் சர்வதேசம் தனியார் நிறுவனமொன்றின் ஆலோசகராகவும், ஊக்கமூட்டும் பேச்சாளராகவும்(motivational speaker), பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை வழங்குநராகவும்,மேலும் சில அரச சார்பற்ற இலாப நோக்கமற்ற தனியார் நிறுவனங்களின் சமூக செயற்பாட்டாளராகவும், கவிதைகள் மற்றும் விளம்பரங்களுக்கான குரல் கலைஞனாகவும்(voice artist) பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

எனது குடும்ப பின்னணியை பற்றி கூறப்போனால் எனது தாயார் நபீஸா மற்றும்  சகோதரி பாத்திமா சறோபா   சகோதரன் முர்ஷித் ஆகிய நான்கு நபர்களை கொண்ட மிகவும் சிறிய ஒரு குடும்பம் நான் சிறுவயதில் இருக்கும் போதே எனது தந்தையார் எங்களை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார். எனது தாயார்தான் எங்களது குடும்பத்தை தந்தை இல்லாத குறை கூட தெரியாமல்  குடும்பத்தை இன்றுவரை கட்டி காத்து வருகிறார்.

02.கவிதாயினி சப்னாவுக்கு கவிதை மீது காதல் வந்தது எப்போது?

பாடசாலைக் காலங்களில் இருந்து கட்டுரை, பேச்சு, வாசிப்பு, அறிவிப்பு போன்றவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது.

ஆனால் கவிதை மீது எனக்கு காதல் ஏற்பட மிக முக்கியமான காரணமாக அமைந்தது எனது மூத்த சகோதரிதான்.அவர் தற்போது எங்களுடன் இல்லை இறைவனடி சேர்ந்து விட்டார்.

 நான் நடுத்தர வயதில் இருக்கும் போது எனது சகோதரியின் டைரியில் எழுதி வைத்த கவிதைகளை காணக் கிடைத்தது அந்த வரிகளில் ஏதோ ஈர்ப்பு ஏற்பட்டு கவரப்பட்டேன் அதன் பின்னர் மிக முக்கியமாக இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய நபர்கள் எனது பாடசாலைக் காலங்களில் எனக்கு தமிழ் பாடம் கற்பித்து தந்த நஸீரா ஆசிரியை, அஸிஸா ஆசிரியை மாற்றும் றிஸ்லா ஆசிரியையும் இவர் மூவரின் கற்பித்தல் முறையிலும் தமிழ் மீதான பற்றுதல் தொடங்கியது. ஆரம்ப காலம் தொடக்கம் எனக்கு வாசிப்பு மீது அதிக ஈடுபாடு இருந்தது புத்தகங்களின் பக்கங்களில் மூழ்கித் திளைப்பதில் அலாதிப் ப்ரியம்,அத்தோடு  சில பாடல்களின் வரிகளில் தொலைந்து அர்த்தங்களை தேட ஆரம்பித்த போது என்னுள் தோன்றிய சொற்களை வரிகளாக்கி அதற்கு கவி உருவம் கொடுத்தேன், இவை எல்லாம் இணைந்துதான்  கவிதை மீதான காதல்  ஏற்பட காரணமாக அமைந்தது. சில வானொலி நிகழ்ச்சிகளுக்கும் என் கவிதையின் மீதான காதலுக்கு பங்குண்டு.

எனது கன்னி கவிதையாக நான் எழுதிய எனது முதல் கவிதை "எனது தாய்க்காக ஒரு வாழ்த்து மடல்" அந்த கவிதை 2012ம் ஆண்டு விடிவெள்ளி பத்திரிக்கையில் பெண்மணிக்காக பக்கத்தில் பிரசுரமாகியது.

அதை சமூக வலைத்தள முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போது அதற்கு அதிக பாராட்டு மற்றும் வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகுதான் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரை, சிறுகதை, ஆய்வுக்கட்டுரை, தொடர் கவிதை, சிறுகவிதை என எனது பயணத்தை தொடர ஆரம்பித்தேன்.

03.உங்களது புனைப்பெயர்?

அந்த பெயருக்குப் பின்னால் ஏதாவது  சுவாரஸ்யங்கள் இருபின் அதைக்கூட    பகிர்ந்து கொள்ளுங்களேன் எங்களது ரசிகர்களுக்காக..?

நிச்சயமாக ஆரம்ப காலங்களில் நான்  நிலாதோழி மற்றும் கவியரசி எனும் பெயரில் தான் எழுத ஆரம்பித்தேன் சமூக வலைத்தளங்களில் எனது கவிதைகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது அதன்பிறகு எனது சொந்த ஊரின் பெயரான நிந்தவூர் எனும் பெயரோடு சேர்த்து கவி என்ற பெயரையும் இணைத்து இந்த நிந்தவூர் கவி எனும் பெயரில் தற்போது எழுதி வருகிறேன்

இந்தப் பெயரை எனது புனை பெயராக வைப்பதற்கான காரணம் எனது ஊரின் மீதான பற்றுதலும், பொதுவாக கிராமப்புறங்களில் வாழுகின்ற பெண்கள் இலக்கிய மற்றும் ஊடகத் துறைகளில் தனது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருந்தாலும் தன்னை உரிய முறையில் அடையாளப்படுத்திக் கொள்வதில் அதிக அளவில் ஈடுபாடு காட்டிக்கொள்வதில்லை

அந்த விடையத்தில் ஒரு பெண்ணாக எனது ஊரின்  அடையாளத்தை உலகறிய செய்யவும், அது மாத்திரமல்லாது கடல்,வயல் என சுற்றிலுமாக இயற்கையுடனான ரசனை மிகுந்த ஒரு சூழலை கொண்ட ஊராகும். என் கவிதைகளுக்கு ஊரின் இயற்கை கலந்த சூழலும் ஊரில் பேசப்படும் எளிய  மொழிநடையும் கவிதை மீதான ஆர்வத்தை தூண்டியது அதற்காகத்தான் எனது ஊரின் நாமத்தோடு எனது கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

04.கவிதை,  கட்டுரை,  விமர்சனம் இவற்றைத் தவிர்த்து, வேறெந்த  துறைகளில் அதிக ஆர்வங்காணப்படுகிறது?

ஊடகத்துறையில் எனக்கு அதிக விருப்பம் உண்டு. மேலும் சமூக சேவைகள் செய்வதிலும்  அதிக ஈடுபாடு உண்டு அது மாத்திரமல்லாது ஒப்பனை கலை துறை, ஆடை வடிவமைப்புத்துறை, ஓவியம்,  வர்த்தகத் துறையிலும் நான் அதிக ஆர்வத்துடன் செய்யப்பட்டு வருகிறேன் 

05.பொதுவாக பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தொடர்ந்து விமர்சிக்கும் போக்கிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த சமுதாயத்தில் பெண்களுக்கென்று சில வரையறைகளை விதிமுறைகளை இந்த சமுதாயம் வகுத்து வைத்துள்ளது.

பெண் சுதந்திரம் பெண்ணுரிமை என்று பல குரல்கள் ஓங்கி ஒலித்தாலும்  பெண்களுக்கு சில சமயங்களில் அவை மறுக்கப்படுகின்றது. சில இடங்களில் பெண் எழுத்தாளர்களுக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் 

பல்வேறுபட்ட முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன.

மேலும் பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களை சமூகத்தின் முன் கொண்டு செல்லும்போது அவை முதலில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே அந்தப் படைப்புகளுக்கான அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

பெண் என்பவள் மிகவும் மென்மையான குணங்களை  கொண்டவள் விமர்சனங்கள் மூலமாக அவளை  இலகுவில்  மனம் தளர செய்துவிடலாம் என்பதே விமர்சகர்களின் எண்ணப்பாடாக அமைக்கிறது. 

மேலும் பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களை சமூகத்தின் முன் கொண்டு செல்லும்போது அவை சில சமயங்களில் பாரிய குற்றங்களாகவும் நோக்கப்படுகின்றது. எழுத்துக்களை அதில் அடங்கும் கருத்துகளை விமர்சனம் செய்வதை விட்டும் ஒரு பெண்ணின் படைப்பு என்பதால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.

இவ்வாறாக விமர்சிப்பதன்  மூலமாக அவளின் செயற்பாடுகளை முன்னெடுக்க விடாமல் தடை செய்வதே பிரதான நோக்கமாக அமையலாம். பெண்  படைப்பாளிகளுக்கும் அவர்களின் எழுத்துக்களுக்கும் சிறந்த அங்கீகாரங்களை வழங்கி அவர்களின் திறமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். பெண்களின்  சிறந்த படைப்புகளுக்கு வாழ்த்தா விட்டாலும் பரவாயில்லை விமர்சனங்கள் மூலமாக அவர்களின் எழுத்துக்களை  எட்டா தொலைவில் எட்டித்தள்ளிவிட வேண்டாம்.

06..நீங்கள் இது வரை பெற்ற  பாராட்டுக்கள், விருதுகள் பற்றி    சொல்லுங்களேன்?

பாடசாலைக் காலங்களில் இருந்தே எனக்கு இலக்கியத்தின் மீதான ஆர்வம் இருந்து வருகிறது.

பாடசாலைக் காலங்களில் தமிழ்த்தினப் போட்டிகளில் பேச்சுப்போட்டி,வாசிப்பு போட்டிகளில் பல விருதுகள் கிடைக்க பெற்று இருகின்றன. 

பாடசாலை முடிவடைந்து விட்ட தற்காலப்பகுதிகளில் சிறந்த சமூக சேவையாளர் விருது, கலைத்துறையின் சிறந்த கலைஞக்கான விருது, இலங்கை அபிவிருத்தி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர் விருது மற்றும் பாராட்டும், பல சமூகவலைத்தள கவிதைப் போட்டிகளில் சிறந்த கவிதாயினி விருதுகளும், வாய்மொழி மூலமான காணொளிக் கவிதைகளுக்கு கவிக்குயில் விருதும்,  இளம்சமாதான ஊடகவியலாளர் விருதும், எனது தயாரிப்பில் வெளியான நேர்முக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறந்த தயாரிப்பு மற்றும் நெறியாள்கைகான விருதும், UNDP  அமைப்பினால் நடாத்தப்பட்டஆவணப்படுத்தல் போட்டியில் சிறந்த தமிழ் மூல ஆவணத்திற்காண விருதும், நுண்கலைத்துறையில் சிறந்த கலைஞனுக்கான விருதும் இதுவரையில் கிடைக்கப் பெற்று இருக்கின்றது.

07.கவிதாயினியாக/ ஒரு ஊடகவியலாளராக /நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஆதரவு எவ்வாறு காணப்படுகின்றது?

எனது குடும்பத்தைப் பொருத்தவரையில்  எனது தாயார் தான் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து துணிச்சல் மற்றும் உந்துதல் சக்தியை அளித்து வருகிறார் எனது முயற்சிகள் அனைத்திலும் அவரின் பங்களிப்பு மிக மிக  அதிகமாகவே காணப்படுகிறது 

எனது செயற்பாடுகள் எதற்கும் அவர் தடைகள் விதித்ததில்லை

எனக்கு  தாயாகவும் தந்தையாகவும் எனது அனைத்து செயற்பாடுகளிலும் அவர் என்னுடன் பயணித்துக்  கொண்டிருக்கிறார்

என் உடன் பிறப்புகளும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள் 

மேலும் நான் ஊடகவியலாளராக கவிதையாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியதில் எனது குடும்பத்தினர்  மட்டற்ற மகிழ்ச்சி தான் அடைகிறார்கள் நான் கடந்து வந்த பாதைகளின் சவால்களை எதிர்கொள்ள எனது குடும்பத்தினரும் எனக்கு பக்கபலமாக செயற்பட்டனர். மேலும் என் கவிதைகளுக்கு ரசிகர்களாகவும் என் ஊடக செயற்பாடுகளுக்கு ஆலோசகர்களாகவும் எனக்கு அவர்களின் ஆதரவினை இன்று வரையில் வழங்கி வருகின்றனர்.

08.கடந்துவந்த பாதையில் மறக்க முடியாத சம்பவங்கள்/ கிடைத்த ஆறாத காயம் எதிர்நோக்கிய சாவால்கள்?

ஒரு பெண் என்பவள் சாதாரணமாக பல்வேறுபட்ட சவால்களை சந்தித்து  தான் இந்த சமுதாயத்தில் தனக்கான ஒரு இடத்தினை அடைந்து அதை தக்க வைத்து கொள்ள முடியும்.

 அந்த வகையில் நான் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆரம்ப காலங்களில் முகநூலில் எனது பெயரில் எழுத ஆரம்பித்தபோது   பெண்ணிற்கு  ஏன் இந்த தேவையில்லாத வேலை என்ற கேள்விகளும்  விமர்சனங்களும்  எழுந்தது.

அதன் பிறகு நான் நிகழ்ச்சி தொகுப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது இஸ்லாமிய பின்னணியை கொண்ட பெண்  என்பதால் கலாச்சாரத்தை காரணம் காட்டியும் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு உள்வாங்கப்பட்டேன்.

 மேலும் பலவிடங்களில் நிராகரிப்புக்களும் இடம்பெறாமல் இல்லை.

ஊடகவியலாளராக ஊடகத்துறையில் தடம் பதித்த போது இவையெல்லாம் ஆண்களின் தொழில் என்றும் பெண்களினால் முடியாத காரியம் என்றும் கூவினார்கள். இவற்றை பொடியாக நொறுக்கி விட்டு முன்னே சென்ற போதும் தட்டிவிட எத்தனித்தார்கள்.

மேலும் சிலர் என்  திறமைகளை மட்டம் தட்டுவதிலும், என்னை இலக்கியத்துறை மற்றும் ஊடகத் துறையில் இருந்து வெளியேற்றுவதற்காகவும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்தி இருக்கிறார்கள். 

ஆறாத காயமாக இருக்கின்ற ஒரு முக்கியமான விடயம்தான் தொடர்கதை களுக்கென்று முகநூலில் இருந்த எனது பக்கத்தினை இல்லாது ஒழித்து விட்டனர்.

மேலும் சவால்களாக எனது கவிதைகளை பிரதி பண்ணி தத்தமது பெயர்களில் பதிவேற்றம் செய்தும் பாராட்டுக்களையும்  பெற்றுக் கொள்கின்றனர்.

மேலும் ஊடகவியலாளராக நான் பயணிக்க ஆரம்பித்த போது எழுத்துக்கள் என்றால் என்ன என்று அரை கிராமமும் அழியாத  ஒரு சில கூட்டம் பெண்ணிற்கு இது எல்லாம் தேவைதானா என்ற கேள்விகளை  எழுப்பினார்கள்.

 அத்தோடு மேலும் சிலர் என் கவிதைகளை எங்கேயோ பார்த்ததாகவும் நான் பிரதி பண்ணி போடுவதாகும் பழி சுமத்தினார்கள். இவ்வாறாக பல்வேறுபட்ட சிரமங்களை தகர்த்தெறிந்து என்று இலக்கியத் துறை மற்றும் ஊடகத் துறையில் பயணிக்கிறேன்.

09.முகநூல் கவிதைகள்” / கவிஞர் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 

முகநூலில்  எழுதப்படுகின்ற கவிதைகள் அனைத்தும் கருத்தாழமிக்கதாகவும் இலகுவான மொழி நடைகளில் அனைவருக்கும் விளங்கக் கூடிய வகையிலும் காணப்படுகின்றன. அத்தோடு முகநூல் கவிதைகள் இலகுவில் மிகக் குறுகிய காலப்பகுதியில் அனைவரிடமும் சேர்ந்துவிடுகிறது.

மேலும் சமூகத்திற்குத் தேவையான பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கிய தலைப்புக்களில் எழுதப்படுகின்றன. ஆண் பெண் பேதமின்றி வயது பாகுபாடின்றி நிறைய வளர்ந்து வரும் இளம் கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது.

நிறைய திறமையானவர்களை கவிஞர்களை அடையாளம் காட்டி தந்திருக்கிறது.

முகநூல் இலைமறை காய்களாக சமுதாயத்தில் காணப்படுகின்ற நிறைய கவிஞர்களை இந்த உலகத்திற்கு காட்டி தந்திருக்கிறது.

சிலர் தனது அடையாளத்தோடு கவிதைகள் எழுதுகிறார்கள் சிலர் புனைபெயர்களில் தனது கவிதை மீதான காதலை பற்றுதலை திறமையை வரிகளாக்கி பதிவிடுகின்றனர்.

முகநூல் கவிஞர்கள் சிலர் சிறிது காலம் முக நூல்களில் கவிதைகளை எழுதி தனது அடையாளத்தை பெற்றுக்கொண்ட பின்னர் சிறிது காலத்தின் பிறகு தனது அடையாளம் தெரியாத அளவு மறைந்து விடுகிறார்கள்  அவை மிகவும் கவலையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக காணப்படுகிறது.

 முகநூல் கவிதைகள் என்னை போன்ற பெண் எழுத்தாளர்களுக்கும் கவிதாயினிகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் வாய்ப்பினை வழங்கி இருக்கிறது.

தமது அடையாளத்தை உலகறிய செய்ய வேண்டும் என்பதை தாண்டி தனது கவிதைகளுக்கான அங்கீகாரம்

முகநூல் பக்கம் கிடைக்க வேண்டும் என்பதே கவிஞர்களின் எதிர்பார்ப்பு. 

முகநூல் பக்கதோடு மட்டும்  அவர்களின் கவிதைகள் வெளியிடப்படாமல் படைப்புகளாக இந்த சமுதாயத்தில் உலா வர வேண்டும் என்பது எனது மிகப்பெரிய அவா.

10.இறுதியாக எமது நேயர்களுக்காக ஏதும் சொல்ல விரும்பினால்?

திறமைகள் என்பது உருவாக்கப்பட்டவை அல்ல உருவாக்கப்பட வேண்டியவை எல்லோருக்குள்ளும்  திறமைகள் காணப்படுகின்றன அவற்றை நீங்கள் தான் அடையாளம் காண வேண்டும் சிலருக்கு பல திறமைகளும்  காணப்படும்.

உங்களால் எது முடியும் என்பதை உங்களுக்குள்ளே நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள். இல்லையென்றால் முயற்சி செய்து திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும்  உங்கள் வாழ்க்கையில் இலக்குகளை உருவாக்கி கொள்ளுங்கள். இலக்குகளை நோக்கி உங்கள் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக ஒரு நாள் இலக்குகளைக அடைவீர்கள்.

சிலவேளைகளில் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்விகளில் முடிவடையலாம் ஆனாலும் மனம் தளர வேண்டாம். ஒவ்வொரு தோல்வி களிலும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக் கொள்வீர்கள்.

மனிதர்களை படித்து கொள்வீர்கள். வாழ்க்கையின் சுவாரசியங்களை புரிந்து கொள்வீர்கள்.காலம் எப்போதும் உங்களுக்காக காத்துக் கிடைக்காது நீங்கள் காலத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களைப் பற்றி இந்த உலகம் ஓராயிரம் பேசும் ஆனாலும் நீங்கள் யார் என்பதை இந்த உலகையே பேச வையுங்கள். வாழ்க்கையின் அழகான தருணங்களை நினைவுச் சின்னங்களாக நட்டு வையுங்கள். முயற்சிகள் எப்போதும் வெற்றிக்கனியை சுவைத்தே தீரும்.

இறைவனால் பரிசளிக்கப்பட்ட இந்த அழகான வாழ்க்கையில் அன்பை எல்லோருக்கும் பரிசளித்துவிட்டு செல்வோம் பிறரின் திறமைகளை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்காமல் நகர்ந்து செல்வோம் 

இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் சிறந்த எண்ணங்களை கொள்கைகளை வாழ்க்கையின் இலட்சியங்களாக வைத்துக்கொள்ளுங்கள் உங்களுடைய இலக்குகளை இலகுவாக அடைந்து கொள்வீர்கள்

தொகுப்பு :  பாத்திமா முஜாமலா கவிதாயினி வானம்பாடி முஜா 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK