சுஐப் எம்.காசிம்-

"தர்மம் உலகிலே நிலைக்கும் வரையிலே நாளை நமதே" சினிமாப் பாடலோடுதான் எமது நாட்டின் இன்றைய நிலைமைகளை நோக்க நேரிடுகிறது. யுத்தம் முடிந்த பத்து வருடங்களாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளை அதிக அக்கறையுடன் பார்க்கும் நாடாகத் தான் இலங்கையும் மாறியிருக்கிறது. அதிகாரப் பகிர்வை வேண்டிநின்ற ஒரு சமூகத்துக்கு அநீதியிழைக்கப்பட்டதாகக் கருதப்படுவதும், ஆதிக்க ஒடுக்குமுறைகள் சிறுபான்மையினரின் குடியுரிமையைக் குறிவைக்கும் என்ற அச்சமும்தான் இலங்கை அரசியலை சர்வதேசத்தில் இழுபறிக்கு உள்ளாக்கி உள்ளது. உடன்பட்டிருந்தால் பிரச்சினையை உள்நாட்டில் தீர்த்திருக்கலாம், ஊர்தாண்டிச் சென்று விட்டதே!. இந்தக் கவலை, ஆட்சியாளர்களுக்கும் இருக்கவே செய்கிறது. இல்லாவிட்டால், இத்தனை ஏற்பாடுகளையும் செய்யுமா இந்த அரசு?

ஒரு வகையில், இப்போது இந்தப் பிரச்சினை வேறு வடிவில் செல்வதையே காணத் தோன்றுகிறது. போர்க் குற்றங்களுக்காக அரசைத் தண்டித்தால் போதுமென்ற பாணியில்தான் ஜெனீவாக் களமும் நகர்கிறது. இருதரப்பும் இதற்காக முன்வைக்கும் சாட்சியங்கள், விவாதங்கள் மற்றும் தர்க்கிப்புக்களால், ஜெனீவாக் களம் களைப்படைந்து காணப்படுகிறது. இதில், சர்வதேச ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தாலும் அல்லது முடியுமென அரசு நம்பினாலும், ஐரோப்பாவில் இலங்கை அரசுக்குள்ள  பலம், பலவீனமாகவே உள்ளது. இத்தனைக்கும் மனித உரிமைப் பேரவையிலுள்ள 47 உறுப்பு நாடுகளில், வெறும் 13 தான் மேலைத்தேய நாடுகள். இவற்றை, வைத்துக் கொண்டுதானா சிறுபான்மைத் தரப்பு போரியல் அழிவுக்கான நீதியை எதிர்பார்ப்பது என்றும் சிலர் சிந்திக்கின்றனர்.

இதுவல்ல விடயம், இங்குள்ள ஏனைய ஆசிய, பசுபிக், ஆபிரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் சில, ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கிற்கு உட்படலாமென்ற எதிர்பார்ப்புக்களே, தமிழர் தரப்புக்குள்ள நம்பிக்கை. ஆனால், வாக்களிப்பில் நிச்சயம் தத்தமது தேவைகள் செல்வாக்குச் செலுத்தாமல் விடப்போவதில்லை. "அயல் நாடுகளின் உறவுகளுக்கே முன்னுரிமையளித்து இந்தியா செயற்படும்" என அறிவிக்கப்பட்டதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை கொண்டு வருவதில் பிரித்தானியா, கனடா, ஜேர்மன், மொண்டிநிக்ரோ, மாலாவி மற்றும் மசிடோனியா ஆகியன செலுத்தும் அக்கறைக்கு இன்னுமொரு அர்த்தமும் உள்ளதாகத்தான் தோன்றுகிறது. மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்து அராஜகம் செய்யும் இராணுவ ஜூண்டாக்களை, எதிர்காலத்தில் தண்டிப்பதற்கான முன்னுதாரணத்தையே இந்நாடுகள் காட்டுகின்றன. இந்த வாக்கெடுப்பில் ஒரு நாட்டைத் தண்டித்து ஏனையோரை எச்சரிக்கும் பாணியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடுகள் மட்டுமல்ல, மக்களின் குடியுரிமைக் கோட்பாடுகளை மதிக்கும் சகல நாடுகளும் வாக்கெடுப்பில் (22) இலங்கையைத் தோற்கடிக்க வேண்டுமென்கின்றன இந்த இணையனுசரணை நாடுகள். இதில், தோற்பது பற்றி இலங்கை அரசுக்குப் பொருட்டில்லை. போரின் மௌனத்துக்குப் பின்னர் 2012,2013,2014 ஆம் ஆண்டுகளிலும் அரசாங்கம் இதில் தோற்றதுதானே. ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பிரேரணை வந்தால் சீனா காப்பாற்றும், "ரோம்" உடன்படிக்கையில் கைச்சாத்திடாத எம்மை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஹேக்) நிறுத்த முடியாது என்ற போக்கில் பயணிக்கிறது இலங்கை அரசு.

எனினும், ஒன்று மட்டும் உண்மை. மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தோற்பது, தமிழர்களின் அரசியல் போக்கில் வேறு தடத்தைப் பதித்து, எதிர்கால அணுகுமுறைகளுக்கு வலுச் சேர்க்கும். மாறாக இலங்கையின் வெற்றி, ஒற்றையாட்சிக் குறிக்கோளுக்கு பலம் சேர்த்து, தமிழ் பேசுவோரின் தாயகம் என்ற பூர்வீகத்தையும் பதம் பார்க்கலாம். விரைவில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலில், கிழக்கில் இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதற்காகத்தான், தமிழர் தரப்பு நியாயங்கள் வெல்வதற்கு ஐரோப்பா கடுமையாக உழைக்கிறது. இப்படி உழைக்க ஐரோப்பாவுக்கு என்ன தேவை? தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்தான் உழைக்க வைக்கின்றன என்கிறது அரசாங்கம்.

நாடில்லாவிட்டாலும் தமிழர்கள், நாதியற்றுப் போகவில்லை என்பதைக் காட்டும் களப்பணிகள் இதுவரைக்கும் தமிழர்களுக்கு கை கொடுத்துத்தான் வருகின்றன. இதற்காகத்தான் "ஷீரோ ட்ராப்ற்" சாட்சியங்களைப் பதிவதற்கான குழுவும் நியமிக்கப்படவுள்ளது. பத்துப் பேருடைய இந்தக் குழு, இலங்கையில் இடம்பெற்றதாக நம்பப்படும் போர்க் குற்றங்களுக்கான சாட்சியங்கள், ஆதாரங்களைத் தேடி, திரட்டி ஆவணப்படுத்தவுள்ளது. இந்தக் குழுவின் பணிக்கென இரண்டு மில்லியன் அமெரிக்க டொலரை அவுஸ்திரேலியா வழங்கவுமுள்ளது. சரணடைந்தோரைக் கொலை செய்தல், பழிவாங்கல் கொலை மற்றும் பாலியல் கொலைகள் உள்ளிட்ட போர்க் களத்தில் நடந்தவை திரட்டப்பட்டு நீதிக்கு முன், பழிவாங்கல் கொலைகளும் பாலியல் கொலைகளும் போர்க் குற்றங்களிலும் கடின குற்றங்களாகவே மனித உரிமைப் பேரவையால் நோக்கப்படுகிறது.

விரகதாபம், பாலியல் உணர்வு இல்லாத நிலையிலும் அந்நிய இனத்தைப் பழிதீர்ப்பதற்காக, போர்க் களத்தில் வல்லுறவு புரிந்து கொலை செய்வதையே இந்தக் குற்றங்கள் குறித்து நிற்கின்றன. இவ்வாறு நிகழ்வது பெரும்பாலும் அந்நிய இனத்துக்கு எதிரான படையெடுப்புக்களையே, பிரதிபலிக்கிறது. இன அழிப்புச் சான்றுக்காக தேடப்படுபவை இவைதான். எனினும் மனிதாபிமானத்துக்கான இறுதி யுத்தத்தில், இவை எதுவும் நடக்கவில்லை என்கிறது இலங்கை.

இந்நிலையில், இவற்றை எப்போது திரட்டி, எந்த அமர்வில் வழங்குவதென்ற கால எல்லை குறிப்பிடப்படாததால், தமிழ் தரப்பில் சிலர், இதை பொருட்டாகவே கொள்ளாது காலங்கடத்தி திசை திருப்பும் செயல் என்கின்றனர். அதேநேரம், ஒருதரப்பை மாத்திரமே கண் வைத்து கற்பனைக் காரணங்கள் புனையப்படுவதாகக் கூறும் இலங்கை அரசும், குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளது. எனவே பொறுத்திருப்பதே பொருத்தமானது. "நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்"